பெட்டாலிங் ஜெயா, ஜூலை 1 - நேற்று காலை ராவாங்கில் உள்ள பண்டார் கண்ட்ரி ஹோம்ஸில் உள்ள பருத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலான பகுதிகள் சேதமடைந்தன. இருப்பினும், இதில் யாருக்கும் பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
ஜாலான் குண்டாங், பத்து 22இல் உள்ள கேர்ஃப்ரீ காட்டன் இண்டஸ்ட்ரியல் சென்டர் பெர்ஹாமில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து காலை 10.14 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை உதவி இயக்குநர் அஹ்மட் முகலிஸ் முக்தார் தெரிவித்தார்.
சம்பவ இடத்தை தீயணைப்பு வீரர்கள் அடைந்த போது தொழிற்சாலை ஏற்கனவே மோசமாக சேதமடைந்திருந்தது.
பின்னர், தீயணைப்பு வீரர்கள் காலை 11.25 மணிக்குள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கட்டிடத்தின் 90% பகுதி எரிந்து நாசமாகிவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை, மேலும் தீ விபத்துக்கான காரணம் விசாரணையில் உள்ளது.


