கோலாலம்பூர், ஜூலை 1 - சிலாங்கூர், புத்ரா ஹைட்ஸில் எரிவாயு குழாய் பழுதுபார்க்கும் இரண்டாம் கட்டப் பணிகள் 2026-ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் தொடங்கும் என வேலையிட சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இதற்காகப் பொறியியல் வடிவமைப்பு இறுதிச் செய்யப்பட்டு வருவதாக, அத்துறையின் தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
முதல் கட்டத்தில், சேதமடைந்த பகுதியில் உறுதியாகத் தாங்கி நிற்க, சிறப்பு பாலம் போன்ற அமைப்புடன் 210 மீட்டர் அளவிலான தற்காலிகக் குழாய் அமைக்கப்பட்டது.
பாதுகாப்பு சோதனைகளில் கசிவுகள் அல்லது அழுத்தப் பிரச்சனைகள் எதுவும் கண்டறியப்படாததால், இப்பாதை எரிவாயு விநியோகத்தைத் தொடங்கும்.
அனைத்து பழுதுபார்க்கும் முயற்சிகளிலும், பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கையாக, அவசரநிலை ஏற்பட்டால் விரைவான பணிநிறுத்தங்களை அனுமதிக்க, குழாயின் வால்வு அமைப்பின் நிகழ்நேர கண்காணிப்புக்கான அணுகலை வழங்க பெட்ரோனாஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 தீ விபத்துக்குப் பிறகு இதே போன்ற சிக்கல்களால் பாதிக்கப்படக்கூடிய அதன் எரிவாயு குழாய் வலையமைப்பின் பிற பகுதிகளை பெட்ரோனாஸ் அடையாளம் கண்டுவருவ தாக வேலையிட சுகாதார மற்றும் பாதுகாப்புத் துறை கூறியுள்ளது.


