(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூலை 1 - மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் நலன் காக்கும் நோக்கில் ஆறு உறுப்பினர்கள் கொண்ட சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி நடவடிக்கை குழுவை மாநில அரசு அமைக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி மற்றும் ஆட்சிக்குழு ஒப்புதலுடன் அமைக்கப்பட்ட இந்த நடவடிக்கை குழுவுக்கு தாம் ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ளதாக ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.
இந்த தமிழ்ப்பள்ளி நடவடிக்கை குழுவின் தலைவராக அன்பழகன் ஆறுமுகம் நியமிக்கப்பட்டுள்ள வேளையில் உதவித் தலைவராக எஸ். எஸ். பாண்டியன், செயலாளர் சுகுமாறன், துணை செயலாளர் வேணுகோபால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பொருளாளராகப் பிரான்சிஸ், துணை பொருளாளராக திருமதி விசாலெட்சுமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் சார்பில் திருமதி கேரல் ரிமா நியமனம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்தில் தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கி இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில் இந்த செயல்குழு முக்கியப் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளிகள் சம்பந்தப்பட்ட நிலம், உள்கட்டமைப்பு, மேம்பாடு உள்ளிட்ட விவகாரங்களைக் கையாள்வதில் இந்த செயல்குழு தமக்கு உதவியாகச் செயல்படும் என அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் மன்றத்தின் தலைவர் எஸ்.எஸ்.பாண்டியன் தலைமையில் கிள்ளான் விண்ட்ஹாம் தங்கும் விடுதியில் நடைபெற்ற சிலாங்கூர் தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மன்றத்தின் 41ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தபோது அவர் இதனை குறிப்பிட்டார்.


