குவாந்தான், ஜூலை 1- மின் வணிக நிறுவன அதிகாரி மற்றும் போலீஸ்காரர் என தங்களை அடையாளம் கூறிக்கொண்ட ஆள்மாறாட்டக் கும்பலின் மோசடி வலையில் சிக்கி விரிவுரையாளர் ஒருவர் 294,000 வெள்ளியை இழந்தார்.
நாற்பத்து நான்கு வயதான அந்த விரிவுரையாளர் கடந்த ஏப்ரல் 30 ஆம் தேதி இ-காமர்ஸ் எனப்படும் இணைய வர்த்தக நிறுவனத்தின் பிரதிநிதி எனக் கூறிக் கொண்ட நபரிடமிருந்து தொலைபேசி அழைப்பை பெற்றதாகப் பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ யஹாயா ஓத்மான் கூறினார்.
பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி எண் மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாக அந்த சந்தேக நபர் கூறியுள்ளார். பின்னர் அந்த தொலைபேசி அழைப்பு போலீஸ் அதிகாரி எனக் கூறிக் கொண்ட மற்றொரு நபருடன் இணைக்கப்பட்டது
போலீஸ் அதிகாரியாக நடித்த நபர், பாதிக்கப்பட்டவர் போலி ஆவணங்கள் தயாரித்தல் மற்றும் பணமோசடி வழக்கில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்த குற்றத்திற்கு சிறைத்தண்டனை மற்றும் பிரம்படி வதிக்கப்படும் என பாதிக்கப்பட்டவரை மிரட்டினார் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
ஒரு நாளைக்கு ஐந்து முறை தொலைபேசி, புலனம் மற்றும் வீடியோ அழைப்பு மூலம் அழைத்து தனது இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் சந்தேக நபர் பாதிக்கப்பட்டவருக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த மிரட்டல்களால் பீதியடைந்த பாதிக்கப்பட்ட நபர் வங்கி இணையச் சேவை மற்றும் பண வைப்பு இயந்திரங்கள் (சி.டி.எம்.) மூலம் 11 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 17 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் 294,000 வெள்ளியை மாற்றியுள்ளார் என அவர் கூறினார்.
இந்தப் பணம் தனிப்பட்ட சேமிப்பு, குடும்ப சேமிப்பு மற்றும் வங்கியில் கடனாகப் பெறப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.


