கோலாலம்பூர், ஜூலை 1- காஸாவில் மனிதாபிமான நெருக்கடி
மோசமடைந்து வரும் நிலையில் உலகளாவிய ஒற்றுமையும் வலுவான
தார்மீக உறுதியும் உடனடியாக தேவைப்படுகிறது என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினரும் அரசியல் பிரமுகருமான ஜெர்மி
கோர்பினுடன் நேற்று நடத்திய சந்திப்பின் போது தாம் இந்த விவகாரம்
குறித்து பேசியதாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள
பதிவில் தெரிவித்தார்.
காஸாவில் நடைபெற்று வரும் இனப்படுகொலைகளை உடனடியாக
தடுத்து நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு நெருக்குதல் கொடுக்க ஹேக் குழு
உள்பட ஒருமித்த கருத்து கொண்ட நாடுகளுக்கிடையிலான கூட்டு
முயற்சிகள் குறித்து ஜெர்மியுடன் நடத்திய வீடியோ அழைப்பின் வழி
விவாதித்தேன் என அவர் சொன்னார்.
அனைத்துலகச் சட்டங்களை நிலைநிறுத்துவதற்கும் மனித உரிமைகளைப்
பாதுகாப்பதற்கும் நீதியான மற்றும் நீடித்த அமைதிக்கு போராடுவதற்கும்
இரு தலைவர்களும் தங்களின் கடப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தினர்.
காஸாவில் இனப்படுகொலை 21 மாதங்களை எட்டியுள்ளது.
இந்த போரில் இதுவரை 189,000 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது
காயமடைந்துள்ளனர். அதே சமயம், பெண்கள் மற்றும் சிறார்கள் உள்ளிட்ட
11,000 பேரை இன்னும் காணவில்லை.


