சிங்கப்பூர், ஜூலை 1 - ஆசியாவில் கேபின் எனப்படும் விமானத்தின் பயணிகள் அமர்ந்திருக்கும் பகுதியில் நடைபெறும் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் மலேசியாவில் மட்டும் விமானங்களில் 146 திருட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இடங்களில் ஒன்று ஹாங்காங் ஆகும். 2024ஆம் ஆண்டின் முதல் 10 மாதங்களில் 4.32 மில்லியன் ஹங்காங் டாலர் அதாவது 2.33 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள பொருட்களை உள்ளடக்கிய 169 விமானத் திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிங்கப்பூர் விமான நிலையத்தின் காவல்துறை பிரிவின் கமாண்டர் துணைக் கமிஷனர் மாலதி தெரிவித்துள்ளார்.
விமானங்களின் உள்ளே திருடும் கும்பலின் உறுப்பினர்கள் வழக்கமாக ஜோடிகளாக செயல்படுவதால் அவர்களை கண்டறிவது சிரமாக உள்ளது.
அவர்கள் பயணிகளுக்கு சொந்தமான சிறிய அளவிலான பணத்தையும் மற்றும் ஒன்று அல்லது இரண்டு பண அட்டைகளை மட்டுமே திருடுகின்றனர். எளிதாக கண்டுப்பிடிக்க முடியும் என்பதால் அவர்கள் பயணிகளின் முழு பணப்பையையும் திருடுவதில்லை.
மேலும், அதிகாரிகள் செயல்பட குறுகிய நேரம் மட்டுமே இருப்பதால் விரைவான புகார் கிடைத்தால்தான் எங்களது அதிகாரிகள் சந்தேக நபர்களை விரைவாகக் கண்டுபிடித்து, அடுத்த விமானத்தில் ஏறுவதற்கு முன்பு அவர்களை இடைமறிக்க முடியும் என மாலதி சுட்டிக்காட்டினார்.


