சிப்பாங், ஜூலை 1 - இம்மாவட்டத்தில் உள்ள இரு பூர்வக்குடி கிராமங்களை உள்ளடக்கிய பல முக்கிய சாலைகளில் சூரிய சக்தியால் இயங்கக்கூடிய 13 சோலார் விளக்குகள் நிறுவப்பட்டுள்ளன. இரவு வேளைகளில் குடியிருப்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் கம்போங் புக்கிட் பங்கோங்கில் எட்டு சோலார் விளக்குகளும் மஹ்மேரி பழங்குடியினர் அதிகம் வசிக்கும் கம்போங் சுங்கை பெலாங்கானில் ஐந்து விளக்குகளும் பொருத்தப்பட்டதாகப் பூர்வக் குடியினர் விவகாரங்களுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
சோலார் விளக்குகள் அமைக்கப்பட சாலைகளில் ஜாலான் டோக் சென், ஜாலான் பாட்டின் தோடக், ஜாலான் டோக் அபோன் மற்றும் ஜாலான் டோக் ஜு போன்ற முக்கிய வழிகளும் அடங்கும்.
இந்தத் திட்டம் சுமார் 1,071 குடியிருப்பாளர்களைக் கொண்ட 372 வீடுகளுக்கு பயனளிக்கிறது என்று நேற்று கம்போங் புக்கிட் பாங்கோங்கில் சோலார் விளக்குத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாகப் பின்னர் சிலாங்கூர் மீடியாவிடம் அவர் கூறினார்.
அமல்படுத்தப்படும் வளர்ச்சித் திட்டங்களில் சிறுபான்மை சமூகங்கள் ஓரங்கட்டாமல் இருப்பதை உறுதி செய்வதில் மாநில அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த முயற்சி பிரதிபலிக்கிறது என்று பாப்பாராய்டு தெரிவித்தார்.
இந்த முயற்சி கிராமத்தின் புற அம்சங்களையும் பாதுகாப்பையும் மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அரசாங்கத்திற்கும் உள்ளூர் சமூகத்திற்கும் இடையிலான உறவையும் வலுப்படுத்தும்.
இது மாநில அரசின் நிர்வாகத்தின் அடிப்படையான சமூக நீதிக் கொள்கைகளையும் வலுப்படுத்துகிறது என்று அவர் மேலும் கூறினார்.


