ஜோர்ஜ்டவுன், ஜூலை 1 - இவ்வாண்டு மலேசியத் தினத்தை பினாங்கு பட்டர்வொர்த், PICCA மாநாட்டு மையத்தில் கொண்டாட அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. இந்த முடிவை வரவேற்பதாகப் பினாங்கு மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவிற்காக மத்திய அரசாங்கத்திற்கு நன்றி கூறும் அதேவேளையில், இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்கு, மாநில அரசாங்கம் முழு ஒத்துழைப்பை வழங்கும் என்று பினாங்கு மாநில முதலமைச்சர் சௌ கொன் இயோவ் தெரிவித்தார்.
"மலேசிய தினக் கொண்டாட்டத்தை நடத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், மலேசியத் தினக் கொண்டாட்டம் சபா மற்றும் சரவாக்கில் மட்டுமல்ல தீபகற்ப மலேசியாவில் உள்ள மாநிலங்களுக்கு இடையேயும் சுழல் முறையில் நடைபெறவிருக்கின்றது," என்றார் அவர்.
பினாங்கு, ஜோர்ஜ்டவுனில் நடைபெற்ற 2025 மலேசிய தினக் கொண்டாட்டத்தின் பிரதான குழு கூட்டத்தை தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தலைமை தாங்கிய பின்னர் சௌ கொன் இயோவ் செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார்.
16 துணைக் குழுக்களைக் கொண்ட ஒரு பிரத்தியேக குழு மற்றும் செயற்குழுவின் மூலம், மலேசிய தினத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் அதன் கொண்டாட்டத்தை வெற்றியடைய செய்ய பினாங்கு மாநிலம் தயாராகி வருவதாக சௌ விவரித்தார்.
பெர்னாமா


