ஜெர்த்தே, ஜூலை 1 - சமூக ஊடகமான முகநூலில் வெளியிடப்பட்ட உள்ளூர் வங்கி வழங்கியதாகக் கூறப்படும் அதிர்ஷ்டக் குலுக்கு இணைப்பை சொடுக்கிய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சுமார் 164,000 வெள்ளியை இழந்தார்.
தனது வங்கிக் கணக்கில் பணம் குறைந்துவிட்டதை அறிந்த அதே நேரத்தில் சேமிப்புக் கணக்கில் பரிவர்த்தனை நடந்ததாகக் கூறி உள்ளூர் வங்கியிடமிருந்து கடந்த வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்ததைத் தொடர்ந்து 60 வயதான அந்த நபர்
அதே நாளில் காவல்துறையில் புகார் அளித்ததாகப் பெசுட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசாமுடின் அகமது @அபு கூறினார்.
அந்த காலகட்டத்தில் எந்த பணப் பரிவர்த்தனையும் செய்யாத நிலையில் பணம் குறைந்தது கண்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்டவர் உடனடியாக ஜெர்த்தே நகரில் உள்ள ஒரு வங்கியில் பணப் பரிவர்த்தனை அறிக்கை பெறச் சென்றார்.
அங்கு சோதனை செய்தபோது அவரது கணக்கிலிருந்து வெவ்வேறு கணக்குகளுக்கு 39 முறை பணம் எடுக்கப்பட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். இவை அனைத்தும் வெளிநாடுகளை தளமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த மோசடியின் விளைவாக அந்த முன்னாள் ஆசிரியரின் கணக்கில் இருந்த பெரும் தொகை காணாமல் போனது. சுமார் 30,000 வெள்ளி வஙாகியில் மட்டுமே எஞ்சியிருந்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
முன்னதாக, முகநூலில் வழங்கப்பட்ட அதிர்ஷ்டக் குலுக்கல் போட்டியில் பங்கேற்கும் நோக்கில் அதன் இணைப்பில் தனது தனிப்பட்ட விவரங்களை உள்ளிட்டதால் தாம் 'ஃபிஷிங்' மோசடிக்கு பலியாகிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர் சந்தேகிப்பதாக அசாமுடின் கூறினார்.
இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 420 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

