கோலாலம்பூர், ஜூலை 1- காவல் துறை அதிகாரிகள், உறுப்பினர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் நலன் புறக்கணிக்கப்படாமலிருப்பதை உறுதி செய்யும் அதேவேளையில் நிபுணத்துவம், உயர்நெறி மற்றும் அனைவரின் நம்பிக்கையைப் பெற்ற பாதுகாப்பு அமைப்பு என்ற தனது நிலையை அரச மலேசிய போலீஸ் படை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
புத்ராஜெயாவில் நேற்று தம்மை மரியாதை நிமித்தம் சந்தித்த புதிய தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமது காலிட் இஸ்மாயிலிடம் இந்த அறிவுரையை தாம் வழங்கியதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
இந்த சந்திப்பின் போது விவாதிக்கப்பட்ட விஷயங்களில் நடப்பு சவால்களைக் கருத்தில் கொண்டு செயற்கை நுண்ணறிவு உள்பட போலீஸ் படையை நவீனப்படுத்துவதும் அடங்கும் என அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டார்.
மக்களுக்கு தேவைப்படும் முக்கிய அமைப்பாக அரச மலேசிய போலீஸ்படை விளங்குகிறது. நாட்டின் பாதுகாப்பும் அமைதியும் தொடர்ந்து கட்டிக்காக்கபடுவதை உறுதி செய்ய உயரிய கடப்பாடும் உத்தேகமும் தேவைப்படுகிறது என்றார் அவர்.
அரச மலேசிய போலீஸ் படையின் அபிலாஷைகள், தோற்றம் மற்றும் கௌரவத்தை மேலும் உயரிய நிலைக்கு கொண்டுச் செல்ல தாம் டத்தோஸ்ரீ முகமது காலிட்டுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்ததாக அவர் சொன்னார்.
நாட்டின் புதிய போலீஸ் படைத் தலைவராக 2025 ஜூன் 23 தொடங்கி 2027 ஜூன் 22 வரை ஈராண்டுகளுக்கு டத்தோஸ்ரீ காலிட் நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்பு புக்கிட் அமான் சிறப்பு பிரிவின் இயக்குநராகப் பணியாற்றிய காலிட் பணி ஓய்வு பெற்ற டான்ஸ்ரீ ரசாருடின் ஹூசேனின் இடத்தை நிரப்புகிறார்.


