ஜோர்ஜ் டவுன், ஜூலை 1 - ஜெலுத்தோங், தாமான் சினார் பெலாங்கியில் உள்ள அபார்ட்மெண்ட் 99 குடியிருப்பின் வீடொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிக் கொண்ட பதின்ம வயது சிறுவன் தீயணைப்பு வீரர்களின் விரைவான நடவடிக்கையால் காப்பாற்றப்பட்டான்.
இந்த தீவிபத்து தொடர்பில் தமது துறைக்கு இரவு 7.26 மணிக்கு அவசர அழைப்பு வந்ததாகப் பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைப் பிரிவின் உதவி இயக்குநர் ஜான் சகுன் பிரான்சிஸ் கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் வீட்டின் பால்கனி தீப்பிடித்து எரிவதையும் 13 வயது சிறுவன் ஒருவன் வீட்டின் உள்ளே சிக்கியிருப்பதையும் கண்டனர். கதவு பூட்டப்பட்ட வீட்டில் அவன் தனியாக இருந்ததாக நம்பப்படுகிறது.
விரைந்து செயல்பட்ட தீயணைப்புப் வீரர்கள் கதவை உடைத்து அச்சிறுவனை பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
தீயை அணைக்கும் பணி இரவு 8.44 மணிக்கு முடிவடைந்ததாகக் கூறிய அவர், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகச் சொன்னார்.


