ஷா ஆலம், ஜூன் ஜூலை 1- அண்மையில் புத்ரா ஹைட்ஸ் பகுதியில் நிகழ்ந்ததைப் போல் எரிவாயு குழாய் வெடிப்பு சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான தொடர் நடவடிக்கைகளை முன்மொழிய மாநில அரசு ஒரு சிறப்புக் குழுவை அமைக்கும்.
இந்த குழுவில் பெட்ரோலியம் நேஷனல் பெர்ஹாட் (பெட்ரோனாஸ்) மற்றும் தொடர்புடைய இதர நிறுவனங்களும் இடம் பெறும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
எடுக்கப்படும் தொடர் நடவடிக்கைகளில் இதுவும் அடங்கும். இந்த குழு கண்டுபிடிப்புகளை மதிப்பாய்வு செய்து மீண்டும் இத்தகையச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க திட்டங்களை முன்வைக்கும் என்று பேரிடர் தொடர்பான விசாரணையின் முடிவுகளை அறிவிக்கும் சிறப்பு செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
இதே போன்ற பிற பகுதிகளில் ஆபத்தை மதிப்பிடுவதற்கான அடித்தளமாக இந்த விசாரணை முடிவுகளை மாநில அரசு கருதுகிறது என்று அமிருடின் குறிப்பிட்டார்.
இதனைக் கருத்தில் கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை பிரிவின் கீழ் ஒரு சிறப்புக் குழு நிறுவப்படும். இந்தக் குழு சட்ட சீர்திருத்தங்கள், திட்டமிடல் ஒப்புதல் நடைமுறைகள் மற்றும் பருவநிலை மாற்ற அபாயங்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளும். அதேசமயம் மேம்பாட்டுக் கொள்கைகள் மற்றும் எரிவாயு குழாய் வழியில் உள்ள அனைத்து பகுதிகளுக்கான வழித்தட சீரமைப்புக்கான முன்மொழிவுகளையும் முன்வைக்கும்.
புத்ரா ஹைட்ஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இது முக்கியம். இதன்வழி இதுபோன்ற மோசமான சம்பவங்கள் மீண்டும் நிகழாது என்று அவர் கூறினார்.
முன்னதாக, செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், குழாய் வெடிப்பு சம்பவத்திற்கு முறைகேடு, நாசவேலை அல்லது அலட்சியம் காரணமாக இருந்ததற்கான எந்த ஆதாரமும் போலீஸ் விசாரணையில் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார்.


