(ஆர்.ராஜா)
‘நீலத்தைப் பிரித்து விட்டால் வானத்தில் ஏதுமில்லை‘ இதனை
மேலோட்டமாகப் பார்த்தால் தமிழ் சினிமா பாடல் ஒன்றின் இடையில்
வரும் ஒரு வரி. ஆழ்ந்து பார்த்தால் ஓர் இனத்தின் வலி. இந்த வரி
மலேசியாவிலுள்ள இந்திய சமூகத்திற்கு மிகவும் பொருந்தும். நீலம்
இல்லாவிட்டால் வானத்தில் எப்படி எதுமில்லையோ அது போல் நீல நிற
அடையாளக் கார்டு இல்லாவிட்டால் வாழ்க்கையில் நமக்கும் ஏதுமில்லை.
அடையாளமும் அங்கீகாரமும் இல்லாத வெறும் அஃறினைகளாகத்தான்
நாமிருப்போம்.
இந்த அவல நிலையைத் தான் நமது இனம் அரை நூற்றாண்டுகளாக
அனுபவித்துக் கொண்டிருக்கிறது. குடியுரிமை இல்லாதவர்களிடம் “நீங்கள்
இந்நாட்டு பிரஜையும் இல்லை, உங்களுக்கு எந்த உரிமையும் இல்ல
வெறும் எண்ணிக்கைகான குறியீடுதான் நீங்கள்“ என உணர்த்தும் விதமாக
வழங்கப்பட்டதுதான் சிவப்பு அடையாள அட்டை.
மலேசியாவில் வாழும் இந்தியர்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்த
அதே சமயம் பிரிக்காத முடியாத சில வார்த்தைகளில் ஒன்றாக இன்றளவும் இருந்து வருகிறது இந்த சிவப்பு அடையாள அட்டை. அரசாங்கம் கேட்கும் ஆவணங்கள் இல்லாதது, மலாய் மொழியில் பேசத் தெரியாதது எனப் பல்வேறு காரணங்களால் பல ஆண்டுகளாக கணிசமான இந்தியர்கள் குடியுரிமையைப் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
மலாய்க்காரர்கள், சீனர்கள், பூர்வ குடியினரும் கூட குடியுரிமைப் பிரச்சனையில்
சிக்கியுள்ளனர். எனினும் எண்ணிக்கை அடிப்படையில் வம்சாவளியினர்தான் முதல் இடத்தில் உள்ளனர். மலேசியா சுதந்திரம் பெற்ற கையோடு விண்ணப்பித்தவர்களுக்கு உடனுக்குடன் குடியுரிமை கிடைத்தது. அச்சமயம் லட்சக்கணக்கான சீனர்கள், இந்தியர்கள் குடியுரிமை பெற்றனர். அவர்கள் நீண்ட காலம் மலேசியாவில் வசித்ததற்கான ஆவணங்கள் இதற்கு உதவின.
அதே சமயம், தோட்டப்புறங்களில் வசித்த பலர் குடியுரிமையின் முக்கியத்துவம் குறித்து
அறிந்திருக்கவில்லை. அதனால் தங்கள் பெயரை பதிவு செய்ய தவறிவிட்டனர். அத்தகைய
நபர்களின் அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் இதனால் பாதிக்கப்பட்டனர்.
பெற்றோருக்கு குடியுரிமை இல்லாததால், பிள்ளைகளுக்கு அந்த உரிமை கிடைக்கவில்லை.
தகுந்த ஆவணங்கள் இல்லாதது, வறுமை, வீட்டிலேயே பிரசவமாவது, பதிவு செய்யாத
திருமணங்கள், கைவிடப்பட்ட குழந்தைகள், அறியாமை, ஆதரவற்ற குழந்தைகளை உரியஆவணங்கள் இன்றி தத்தெடுப்பது போன்ற பல்வேறு காரணங்களால் பலருக்கு குடியுரிமை கிடைப்பதில்லை.
குடியுரிமை இல்லாதவருக்கு மலேசியக் குடிமகன்கள் பெற்றிருக்கும் அடிப்படை
உரிமைகள் எதுவும் கிடைக்காது. அடிப்படைக் கல்வி, இலவச மருத்துவம், அரசாங்க
உதவிகளைப் பெறுவது என அனைத்து விஷயங்களிலும் ஏதேனும் பிரச்சனைகளை
எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆண்டாண்டு காலமாக நாம் எதிர்நோக்கி வரும் இந்த அடையாள ஆவண
விவகாரத்திற்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கை பக்கத்தான் ராக்யாட்
அரசாங்கம் மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த பிறகுதான் முன்னெடுக்கப்பட்டது.
2008ஆம் ஆண்டு தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை பக்கத்தான் ராக்யாட்
வென்ற பிறகு அடையாள ஆவணப் பிரச்சனையை களையும் நோக்கில்
மைசெல் எனும் பிரிவை மாநில அரசு உருவாக்கியது.
இந்த பிரிவின் வாயிலாக மூவினங்களையும் சேர்ந்த பெரும்
எண்ணிக்கையிலானோர் அடையாள ஆவணங்களைப் பெற்றுள்ளனர்.
இந்த மைசெல் தற்போது மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ..பாப்பராய்டு தலைமையிலான
ஆட்சிக்குழுவின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இந்த மைசெல் அமைப்பின் வாயிலாகப் பலருக்கு வாழ்வில் விடிவெள்ளி
பிறந்துள்ளது. அடையாள ஆவணங்கள் இல்லாதவர்களுக்கு வழிகாட்டியாக
செயல்பட்டு விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகளை மற்றும்
தேவையான ஆவணங்கள் குறித்த விளக்கங்களை வழங்குவதை இந்த
அமைப்பு பிரதான இலக்காக கொண்டு செயல்பட்டு வருவதாகக் கூறுகிறார்
அதன் ஒருங்கிணைப்பாளர் திருமதி வி.சாந்தா.
இந்த அமைப்பிடம் உதவிக்கு வருவோரில் மிக அதிகமான்னோர்,
குடியுரிமை, சிவப்பு அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம் மற்றும் குழந்தை
தத்தெடுப்பு போன்ற ஆவணப் பிரச்சனைகளை எதிர்நோக்கியவர்களாக
உள்ளனர் என்று அவர் சொன்னார்.
இந்த அமைப்பிடம் உதவி கோரி மூவினங்களையும் சேர்ந்த மக்கள்
வருகின்றனர். அவர்களில் அடையாளம் ஆவணங்கள் தொடர்பான
பிரச்சனைகளை இந்தியர்களும் மலாய்க்காரர்களும் அதிகம் எதிர் நோக்கி
வரும் வேளையில் குழந்தை தத்தெடுப்பு விண்ணப்பங்கள் சீனர்கள்
மத்தியில் அதிகம் வருகிறது என்றார் அவர்.
இந்த அமைப்பின் வாயிலாக கடந்த 2023ஆம் ஆண்டு முதல் இதுவரை
7,800 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்று 4,300 பேருக்கு அடையாள
ஆணவங்கள் பெற்றுத் தரப்பட்டுள்ளன. வீ.கணபதிராவ் ஆட்சிக்குழு
உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் அதாவது 2018 முதல் 2023 ஆகஸ்டு
வரை சுமார் 5,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு கிட்டத்தட்ட 2,000 பேருக்கு
அடையாள ஆவணங்கள் பெற்றுத் தரப்பட்டன என அவர் சொன்னார்.
அடையாள ஆவணங்களைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.
விண்ணப்பதாரர்கள் இந்நாட்டில் பிறந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு
தேவையான ஆவணங்களை சமர்பிக்க வேண்டும். அனைத்து
விண்ணப்பங்களும் கடுமையான பிரிசீலனைக்கு பிறகுதான் அங்கீகரிப்பது
தொடர்பில் முடிவு எடுக்கப்படும்.
முன்பு அடையாள ஆவணங்கள் தொடர்பான விண்ணப்பங்களைப் பரிசீலிப்பதற்கு ஏழாண்டுகள் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால், மடாணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பிறகு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலின் உத்தரவின்படி இரண்டரை ஆண்டுகளில் அந்த விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன என்று சாந்தா குறிப்பிட்டார்.
அடையாள அட்டைகளில் நீலம், சிவப்பு தவிர்த்து பச்சை நிற அட்டையும் உள்ளதாக அவர் கூறினார். தந்தை மலேசியராக இருந்து இறந்து விடும் பட்சத்திலும் தாய் அந்நிய நாட்டு பிரஜையாக இருக்கும் பட்சத்திலும் பிள்ளைக்கு பச்சை அடையாளக் கார்டு வழங்கப்படுகிறது.
இந்த விண்ணப்பத்திற்கு தேவைப்படக் கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க
வேண்டும். விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு பச்சை அடையாள
அட்டை வழங்கப்படும். இந்த பச்சை அடையாள அட்டை உள்ளவர்கள்
திருமணம் செய்யலாம், வாகனமோட்டும் லைசென்ஸ் எடுக்கலாம்,
சேமநிதி வாரியத்திலும் சந்தா செலுத்தலாம். ஆனால் ஓட்டுரிமை மற்றும்
அரசாங்க சலுகைகள் கிடையாது.
இந்த பச்சை அடையாள அட்டையை தலா ஐந்தாண்டுகள் வீதம் இரு
முறை புதுப்பிக்கலாம். பத்தாண்டுகளுக்கு பிறகு அவர்கள் சிவப்பு
அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு மேலும்
பத்தாண்டுகள் காத்திருந்த பிறகே நீல அடையாள அட்டைக்கு
விண்ணப்பிக்க முடியும் என்றார் அவர்.
இத்தகைய அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு பலர் கட்டணங்களை
விதிப்பதை சுட்டிக்காட்டிய அவர், அத்தகையோரிடம் பணத்தைக் கொடுத்து
ஏமாறாமல் மாநில அரசின் ஏற்பாட்டில் இலவசமாக வழங்கப்படும். இந்த
அடையாள ஆவண உதவி சேவையைப் பயன்படுத்திக் கொள்ளும்படி
கேட்டுக் கொண்டார்.
அடையாள ஆவணங்கள் நமக்கு விலை மதிக்க முடியாத பொக்கிஷமாக
விளங்குகின்றன. அவற்றை விண்ணப்பம் செய்வதில் நாம் ஒருபோதும்
அலட்சியம் காட்டக்கூடாது என அவர் வலியுறுத்தினார்.


