கோலாலம்பூர், ஜூன் 30 - நண்பா திட்டம் இந்திய சமூகத்துடன், குறிப்பாக இளைஞர்களுடன் நெருங்கிய உறவு வலுப்படுத்தப்பட்டு, அரசாங்கத் தகவல்கள் முறையாக வழங்கப்படுவதை விரிவுப்படுத்தும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை காட்டுவதாக தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
"இது இரண்டாவது தொடராகும். இது ஜே.கோம்-ஆல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், ஜே-கோம் மற்றும் சமூகத்திற்கு இடையே மட்டுமல்லாமல் பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சமூகத்துடனான உறவுகளை வலுப்படுத்த பல மாநிலங்களில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்," என்றார் அவர்.
அரசாங்கத்தின் கொள்கைகள், முயற்சிகள் மற்றும் பல்வேறு வாய்ப்புகள் தொடர்பான தகவல்கள் பொதுமக்களால் அணுகப்படுவதை மேம்படுத்துவதில் இத்திட்டம் பயனுள்ள இருவழி தொடர்பு தளமாகவும் செயல்படும் என்றும் ஃபஹ்மி கூறினார்.
மேலும், மக்களுக்கான நேரடியாக சேவை மற்றும் தகவல்களை வழங்குவதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளையும் இது பிரதிபலிப்பதாக அவர் விவரித்தார்.
முன்னதாக, ஃபஹ்மி IWK இக்கோ பார்க் @ பந்தாய் டலாமில் நண்பா திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இதில் ஜே-கோம்-இன் தலைமை இயக்குநர் டத்தோ இஸ்மாயில் யூசோப் உட்பட பத்து நாடாளுமன்ற உறுப்பினரும் இந்திய உருமாற்றுப் பிரிவான மித்ராவின் சிறப்பு செயற்குழு தலைவருமான ப. பிரபாகரன் ஆகியோரும் இத்தொடக்க விழாவில் கலந்துகொண்டனர்.
--பெர்னாமா


