NATIONAL

தீவிரவாத அமைப்புகளில் பங்கேற்பு- சொஸ்மா சட்டத்தின் கீழ் சில அந்நிய நாட்டினர்  கைது

30 ஜூன் 2025, 5:14 PM
தீவிரவாத அமைப்புகளில் பங்கேற்பு- சொஸ்மா சட்டத்தின் கீழ் சில அந்நிய நாட்டினர்  கைது

கோலாலம்பூர், ஜூன் 30 - இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) அடிப்படையிலான தீவிரவாத நம்பிக்கைகள் மற்றும் பயங்கரவாத சித்தாந்தத்தை ஊக்குவிக்கும் தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  36 வங்காளதேச நாட்டவர்களில் சிலர் 2012ஆம் ஆண்டு  பாதுகாப்பு குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பலர் தொடர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டுள்ள வேளையில்  சிலர் ஏற்கனவே  சொந்த நாட்டிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக தேசிய போலீஸ்படைத்  தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் தெரிவித்தார்.

உண்மையான நிலைமையை விளக்க நாளை அல்லது நாளை மறுநாள் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன் என்று அவர் இன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

முன்னதாக அவர், மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனத்திற்கு (ஏகேபிஎஸ்) மாற்றப்பட்டுள்ள புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் சுஹைலி முகமட் ஜைன், டிசிபி டத்தோ ஃபாடில் மார்சஸிடம் பணிகளை ஒப்படைக்கும் நிகழ்வை காலிட் நேரில் பார்வையிட்டார்.

சிஐடி  துணை இயக்குநராக (புலனாய்வு/செயல்பாடுகள்) இருக்கும் ஃபாடில்,  நாளை முதல் துறையின் இடைக்கால  இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வங்காளதேச நாட்டினருடன் தொடர்புடைய வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பில் எந்த மலேசியர்களும் சேர்க்கப்படவில்லை என்பதை உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் உறுதிப்படுத்தியதாக நேற்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) நம்பிக்கைகளில் வேரூன்றிய தீவிரவாத சித்தாந்தத்தைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்ட இந்தக் கும்பலில் வங்காளதேச நாட்டினர் மட்டுமே ஈடுபட்டிருந்தனர் என்பது அரச மலேசியா போலீஸ்படையின்  சிறப்புப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அவர் கூறினார்.

தீவிரவாத இயக்கத்தில் நேரடி தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 36 வங்காளதேச பிரஜைகளை கைது செய்வதன் மூலம் வெளிநாட்டு தீவிரவாத வலையமைப்பை போலீசார் அழித்ததாக சைஃபுடின் முன்னதாக கூறியிருந்தார்.

ஏப்ரல் 24 ஆம் தேதி தொடங்கி சிலாங்கூர் மற்றும் ஜோகூரில் மேற்கொள்ளப்பட்ட மூன்று கட்ட பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.