கோலாலம்பூர், ஜூன் 30 - புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் (சிஐடி) துணை இயக்குநர் (புலனாய்வு/நடவடிக்கை) டத்தோ ஃபாடில் மார்சுஸ் நாளை முதல் அத்துறையின் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்கிறார்.
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு அமைப்பின் (ஏகேபிஎஸ்) தலைமை இயக்குநர் பொறுப்புக்கு டத்தோஸ்ரீ முகமது ஷுஹைலி முகமது ஜைன் மாற்றப்பட்டதைத் தொடர்ந்து இந்த பதவி நியமனம் நடைமுறைக்கு வருகிறது.
இங்குள்ள புக்கிட் அமானில் உள்ள தியேட்டர் மண்டபத்தில் நடைபெற்ற பதவி ஒப்படைப்பு, பதவி ஏற்பு நிகழ்வில் தேசிய போலீஸ்படைத் தலைவர் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் கலந்து கொண்டார்.
தேசிய பாதுகாப்பு எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வதில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு துறையை வழிநடத்தும் பொறுப்புக்கு முகமது சுஹைலி நியமனம் பெற்றது அரச மலேசிய போலீஸ் படைக்கு கிடைத்த கௌரவம் என்று முகமட் காலிட் தமது உரையில் கூறினார்.
இது ஒரு சிறிய விஷயம் அல்ல. இது அவர் நிறைவேற்ற வேண்டிய ஒரு பெரிய கடமை என்று நான் நம்புகிறேன். கடமைகள் மற்றும் பொறுப்புகளை முறையாகவும் திறம்படவும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கு காவல்துறை வெளிப்படையாக வலுவான மற்றும் அசைக்க முடியாத ஆதரவை வழங்கும் என்று அவர் தெரிவித்தார்.
முகமது சுஹைலி தனது உரையில், குற்ப்புலனாய்வுத் துறை இயக்குநராக ஒரு வருடம் மற்றும் 11 மாதங்கள் தாம் பதவி வகித்த காலத்தில் ஊக்கத்தையும் ஆதரவையும் வழங்கிய அனைத்து காவல்துறை உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார்.


