புத்ராஜெயா, ஜூன் 30 - அரசு தரப்பு துணை வழக்கறிஞர் (டி.பி.பி.) டத்தோ அந்தோணி கெவின் மொரய்ஸ் கடந்த 2015 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக உறுதி செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட ஆறு பேரின் இறுதி மேல்முறையீடு மீது கூட்டரசு நீதிமன்றம் நாளை தனது தீர்ப்பை வழங்கும்.
தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் டான்ஸ்ரீ அபாங் இஸ்கந்தார் அபாங் ஹாஷிம் மற்றும் கூட்டரசு நீதிமன்ற நீதிபதி டத்தோ ரோட்ஜாரியா புஜாங் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த முடிவை வழங்கும்.
கடந்த மே 14 ஆம் தேதி அரசு தரப்பு மற்றும் எதிர்த்தரப்பு தரப்பு வாதங்களை செவிமடுத்தப் பின்னர் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை பிறிதொரு தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் தேதி குறித்து நீதிமன்றம் இன்று காலை முடிவெடுக்கும் என்று முன்னாள் மருத்துவ நிபுணர் கர்னல் டாக்டர் ஆர். குணசீகரன் சார்பாக வாதாடும் வழக்கறிஞர்களில் ஒருவரான ஜாஸ்மின் சியோங் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.
ஐம்பத்தைந்து வயதான கெவின் கொலை வழக்கில் குணசேகரன் (வயது 62), எஸ். ரவி சந்திரன் (வயது 54), மற்றும் ஆர். தினேஷ்வரன் (வயது 33), ஏ.கே. தினேஷ் குமார் (வயது 32). எம். விஸ்வநாத் (வயது 35) மற்றும் எஸ். நிமலன் (வயது 32) ஆகிய ஆறு பேரும் குற்றவாளிகள் என கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் கடந்த 2020 ஜூலை மாதம்
தீர்ப்பளிப்பளித்தது.
உயர் நீதிமன்றத்தின் தீரப்பை கடந்த ஆண்டு மார்ச் 14ஆம் தேதி மேல்முறையீட்டு நீதிமன்றம் மறுவுறுதி செய்தது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் 4ஆம் தேதி காலை 7.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஜாலான் டுத்தாமாஸ் ராயா செந்துல் மற்றும் ஜாலான் யுஎஸ்ஜே 1/6டி, சுபாங் ஜெயா ஆகிய இடங்களில் இந்தக் கொலை நிகழ்ந்தது.
கெவின் மொராய்ஸ் கோலாலம்பூரில் உள்ள தனது மெனாரா டூத்தா ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்கு புரோட்டான் பெர்டானா காரில் சென்று கொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
அதே ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதி சுபாங் ஜெயா, பெர்சியாரான் சுபாங் மேவாவில் கான்கிரீட் நிரப்பப்பட்ட டிரம்மில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.


