செந்தூல், ஜூன் 30 - நேற்று 38-ஆவது ஆண்டாக கண்ணதாசன் விழா சிறப்பாக நடைபெற்றது. கவியரசு கண்ணதாசனின் உன்னத படைப்பாளரின் புகழ் மலேசியாவில் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டும் எனும் நோக்கில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
கண்ணதாசன் அறவாரியத்தின் ஏற்பாட்டில் கோலாலம்பூர் செந்தூல், ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய மண்டபத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
இலக்கிய ஆர்வலர்கள், கல்விமான்கள், கலைஞர்கள், பழைய பாடல் குறிப்பாக கண்ணதாசன் விரும்பிகள் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
வரவேற்புரையாற்றிய கண்ணதாசன் அறவாரியத்தின் செயலாளர் கரு.கார்த்திக், கண்ணதாசன் மலேசியாவிற்கு வருகைப் புரிந்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
மேலும், பாவலர் கோவதன் உள்ளிட்ட மேலும் சில கவிஞர்களும் மாணவர்களும் விழாவின் இடையே கண்ணதாசன் பற்றிய கவிதைகளையும், அவர் குறித்த பாக்களையும் பாடினர்.
இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பு அங்கமாக நாட்டில் தமிழ், கலை மற்றும் இலக்கியத் துறையில் சேவை ஆற்றியவர்களுக்கு கண்ணதாசன் அறவாரியத்தின் சார்பில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
அதில் துன்.ச.சாமிவேலுவின் விருது புகழ்ப்பெற்ற வரைகலைஞர் ஓவியர் லேனாவிற்கும், டான் ஸ்ரீ எஸ்.சுப்பிரமணியம் விருது எல்.இராமனுக்கும், தமிழவேள் கோ.சாரங்கபாணி விருது கமலசரஸ்வதி இராஜேந்திரனுக்கும், தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியம் விருது பினாங்கு மாநில முன்னாள் காவல்படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ தெய்வீகனுக்கும், இறையருட் கவிஞர் சீனி நைனா முகமது விருது விஜயவாகினி ராஜூவுக்கும் வழங்கி அங்கீகரிக்கப்பட்டது.
இவர்களுடன் சேர்த்து இதுவரை 246 பேருக்கு கண்ணதாசன் அறவாரியம் விருது வழங்கி கௌரவித்துள்ளதாக அவ்வறவாரியத்தின் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமாகிய டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
கண்ணதாசனின் எழுத்துப் புலமையையும் எளிமையான பாடல்கள் மூலமாக எதார்த்தத்தை உணர்த்தும் அவரின் ஆற்றலையும் இன்றைய இளைஞர்கள் கற்றறிந்திருக்க வேண்டியது அவசியம் என்று தமதுரையில் பேசிய அவர், கண்ணதாசனின் வாழ்வியல் கூறுகள் குறித்த கவிதைகளையும் விளக்கத்துடன் மேடையில் படைத்தார்.
அதைத் தொடர்ந்து, நாட்டின் புகழ்ப்பெற்ற இலக்கியக் கவிஞர் அ.பெர்னாட்ஷாவுடன், தமிழ் நாட்டைச் சேர்ந்த இந்திரா விஜயலெட்சுமி மற்றும் தாமல் கோ. சரவணன் ஆகியோரும் கண்ணதாசன் தொடர்பில் கலகலப்பான இலக்கிய உரையாற்றினர்.
- பெர்னாமா


