புத்ராஜெயா, ஜூன் 30 - நீதிபதிகள் நியமனம் அல்லது நீதிமன்றத் தீர்ப்புகள் உள்ளிட்ட நீதித்துறை விஷயங்களில் தாம் தலையிடுவதில்லை என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
நீதிபதிகள் உள்பட அனைத்து நியமனங்கள் மற்றும் சேவை கால நீட்டிப்புகளும் கூட்டரசு அரசியலமைப்பில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.
அரசியலமைப்பை ஒருவர் புரிந்து கொண்டால் செயல்முறை தெளிவாக இருக்கும். ஒரு ஆணையம் உள்ளது, பிரதமர் இருக்கிறார், மாட்சிமை தங்கிய பேரரசர் இருக்கிறார்.
அண்மைய நியமனங்களைப் பொறுத்தவரை வேட்பாளர்களின் பட்டியல் பேரரசரிடம் சமர்ப்பிக்கப்பட்டு பின்னர் ஆட்சியாளர்களின் மாநாட்டில் விவாதத்திற்கு கொண்டு வரப்படுகிறது. இந்த நடைமுறைகள் அனைத்தும் பின்பற்றப்பட வேண்டும் என்று அவர் இன்று பிரதமர் துறை ஊழியர்களுடனான மாதாந்திர சந்திப்பின் போது கூறினார்.
சில தரப்பினரின் செல்வாக்கின் கீழ் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நியமனம் அல்லது பதவி நீட்டிப்பு நீதித்துறையின் நேர்மையைக் கெடுக்கும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.
நீதித்துறை போன்ற அமைப்புகள் அரசியல்மயமாக்கப்படும்போது எடுக்கப்படும் முடிவுகள் துரோகத்தின் தோற்றத்தை அளிக்கும் எனக் கருதுவதாக அவர் கூறினார்.
நீதித்துறை முடிவுகள் முற்றிலும் நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்பட்டவை என்றும் எந்தவொரு நீதித்துறை தீர்ப்புகளிலும் தான் ஒருபோதும் தலையிட்டதில்லை என்றும் அன்வார் கூறினார்.
பிரச்சனைகள் எழுப்பப்படுவதை நான் கேள்விப்படுகிறேன். ஆனால், நான் ஒருபோதும் நீதித்துறை விஷயங்களில் தலையிட்டதில்லை. (நீதிமன்றங்களால்) என்ன முடிவுகள் எடுக்கப்பட்டாலும் அந்த முடிவுகள் அவை சார்ந்தவை. ஆனால், அதுவும் கூட அரசியல்மயமாக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.


