(ஆர்.ராஜா)
கிள்ளான், ஜூன் 30 - பண்டார் செந்தோசாவில் நிலவும் திடீர் வெள்ளப் பிரச்சனைக்குத் தீர்வு காண கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) 6 கோடியே 80 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளது.
சீரான நீரோட்டத்திற்கு தடையாக இருக்கும் கால்வாய்கள் உள்பட இப்பகுதியில் வடிகால் முறையை தரம் உயர்த்துவதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் கூறினார்.
பல திட்டங்களை மாநகர் மன்றம் வகுத்துள்ளது. புதிய நிர்மாணிப்பு மற்றும் தரம் உயர்த்தும் பணிகள் முற்றுப்பெற்றவுடன் அதன் வழி வெள்ளப் பிரச்சனையை குறைக்க முடியும் என நாங்கள் நம்புகிறோம் என்று அவர் சொன்னார்.
வெள்ளப் பிரச்சனைக்கு முழுமையான தீர்வை காண முடியாவிட்டாலும் நாம் எதிர்நோக்கும் மிகப்பெரிய பிரச்சினைக்கு ஓரளவு தீர்வு காண இயலும் என்று நேற்று இங்கு நடைபெற்ற கிளீன் அண்ட் கிரீன் துப்புரவு இயக்கத்தில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேனும் கலந்து கொண்டார்.
பண்டார் செந்தோசா வட்டாரத்தில் வெள்ளம் ஏற்படுவதற்கு குப்பைகளை
கண்ட இடங்களில் வீசுவது முக்கிய காரணமாக விளங்குவதாக கூறிய
குணராஜ், இருப்பினும் அமலாக்கத் தரப்பினரின் கடுமையான நடவடிக்கை
மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக
இப்பிரச்சனை தற்போது குறைந்து வருகிறது என்றார். வெள்ளத்திற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாங்கள் கடந்த வாரம் வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை மற்றும் கிள்ளான் அரச மாநகர்
மன்றத்துடன் சந்திப்பு நடத்தினோம். கால்வாய்கள் குறுகலாகவும் அடைபட்டும் இருப்பதால் சில சந்திப்புகளில் நீரோட்டம் சீராக இல்லாதது கண்டறியப்பட்டது.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண வடிகால், நீர்பாசனத் துறை பிரத்தியேகத் திட்டத்தைக் கொண்டுள்ளது. அந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து கூடுதல் நிதிக்காக அது காத்திருக்கிறது என்றார் அவர்.


