ஷா ஆலம், ஜூன் 30 - புத்ரா ஹைட்ஸ் எரிவாயு குழாய் தீவிபத்து
சம்பந்தப்பட்ட விசாரணையின் அறிக்கை தொடர்பான செய்தியாளர்
சந்திப்பு இன்று மாலை 4.30 மணிக்கு அரசு தலைமைச் செயலகத்தில்
நடைபெறும்.
கடந்த ஏப்ரல் மாதம் முதல் தேதி நிகழ்ந்த அந்த விபத்து தொடர்பான
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் நுட்ப
விசாரணையின் முடிவுகள் இந்த செய்தியாளர் சந்திப்பின் போது
வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் தெளிவான விளக்கத்தை வழங்கும் நோக்கில்
வேலையிட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மற்றும் காவல்
துறையின் விசாரணை அறிக்கைகள் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாக மந்திரி
புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாகக் கூறியிருந்தார்.
இந்த தீவிபத்தில் அலட்சியம் அல்லது கீழறுப்பு உள்ளிட்ட அம்சங்களை
உள்ளடக்கிய தங்களின் விசாரணை முற்றுப் பெற்று விட்டதாகவும்
அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர் வேலையிட பாதுகாப்பு
மற்றும் சுகாதாரத் துறையின் அறிக்கைக்காக தாங்கள் காத்திருப்பதாகவும்
சிலாங்கூர் மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான்
தெரிவித்திருந்தார்.
எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீ சுமார் 30 மீட்டர் உயரத்திற்கு எழுந்ததோடு
அதனை அணைக்க எட்டு மணி நேரம் பிடித்தது. அந்த விபத்தின்
எதிரொலியாக சம்பவ இடத்தில் 9.8 மீட்டர் ஆழமும் 21x23 சதுர மீட்டர்
பரப்பளவு கொண்ட மிகப்பெரிய பள்ளம் ஏற்பட்டது.
தீயின் கடுமையான தாக்கம் காரணமாக சம்பவ இடத்திற்கு அருகிலிருந்த
81 வீடுகள் முற்றாக அழிந்தன. மேலும் 57 வீடுகளில் ஒரு பகுதி
பாதிக்கப்பட்ட வேளையில் 218 வீடுகளுக்கு சேதம் ஏற்படவில்லை.


