வாஷிங்டன், ஜூன் 30 - டிக் டோக்கை வாங்குவதற்கு ஒரு பணக்கார தரப்பு அடையாளம் காணப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அது யார் என்பதை இன்னும் 2 வாரங்களில் தாம் அறிவிப்பதாக அவர் கூறினார்.
மேலும், டிக் டோக்கை விற்க சீனாவின் ஒப்புதலும் அவசியம். அதிபர் சீ சின் பிங் அதனை அங்கீகரிப்பார் என தாம் நம்புவதாக Fox தொலைக்காட்சி செய்திக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் தெரிவித்தார்.
இதற்கு காரணம், டிக் டோக் சீனாவைத் தளமாகக் கொண்ட ByteDance எனும் இணைய நிறுவனத்திற்குச் சொந்தமானதாகும்.
இந்நிலையில் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அது மிரட்டலை ஏற்படுத்துவதாகக் கூறி, ஜோ பைடன் ஆட்சியில் அச்செயலிக்குத் தடை விதிக்க சட்டம் நிறைவேற்றப்பட்டது.
எனினும் அதிபர் தேர்தல் பிரச்சாரங்களில் அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு டிக் டோக் பெரிதும் உதவியது என்பதால், பதவிக்கு வந்ததை அடுத்து டிக் டோக் மீதான தடையை அவர் ஒத்தி வைத்தார்.
ஜூன் 19 வரை 2 முறை தடை நீட்டிக்கப்பட்ட நிலையில், மேலும் 90 நாட்களுக்கு அமலில் உள்ளது.
அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு சர்ச்சையால் சீனாவுடன் ஏற்பட்ட மோதலால், டிக் டோக் விற்பனை தள்ளிப் போவதாக ட்ரம்ப் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


