குனாக், ஜூன் 30 - குனாக்-லஹாட் டத்து சாலையின் 29வது கிலோமீட்டரில் நேற்று காலை 7.00 மணியளவில் நிகழ்ந்த வேன் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் 74 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தோடு அதில் பயணம் செய்த ஒன்பது பயணிகள் காயமடைந்தனர்.
மாற்று ஓட்டுநரின் கவனக்குறைவால் வாகனத்தைக் கட்டுப்படுத்தத் தவறியதைத் தொடர்ந்து அந்த வேன் சாலையின் வலது புறம் சறுக்கி விபத்துக்குள்ளானதாகக் குனாக் மாவட்டக் காவல்துறைத் தலைவர் ஏஎஸ்பி ரெடுவான் ரஹ்மான் தெரிவித்தார்.
இந்த விபத்து நிகழ்ந்தபோது ஓட்டுநர் உள்பட பத்து பேர் அதில் பயணம் செய்தனர். அந்த வேன் செம்போர்னாவிலிருந்து சண்டகான் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்த விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்த வேளையில் நான்கு பயணிகள் லேசான காயங்களுக்கும் மேலும் ஐந்து பேர் கடுமையான காயங்களுக்கும் ஆளாகினர் என்று பெர்னாமா தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.
இந்த விபத்து தொடர்பில் 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 41(1) வது பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இந்த விபத்து குறித்து தமது துறைக்கு காலை 7.19 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து காலை 7.50 மணிக்கு தீயணைப்பு குழு, சம்பவ இடத்தை அடைந்ததாக தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் தளபதி முகமட் ரிட்சுவான் ஷாஹிதுன் கூறினார்.


