மலாக்கா, ஜூன் 30 - இங்குள்ள தாமான் செங் பாருவில் உள்ள ஒரு வீட்டில் கடந்த புதன்கிழமை தந்தையால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் 11 வயது சிறுவனுக்கு தலையில் காயங்களும் இடது கையில் வீக்கமும் ஏற்பட்டன.
இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுவனின் 38 வயது தாய் நேற்று முன்தினம் இரவு 9.11 மணிக்கு தஞ்சோங் மின்யாக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக மத்திய மலாக்கா மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி கிறிஸ்டோபர் படிட் தெரிவித்தார்.
இச்சம்பவம் நடந்த தினத்தன்று இரவு 10.30 மணியளவில் தாம் வீடு திரும்பிய போது தனது மகனின் தலையில் கட்டு போடப்பட்டிருப்பதைக் கண்டதாக டியூஷன் ஆசிரியருமான அம்மாது தனது புகாரில் கூறியுள்ளார்.
மகன் பொய் சொன்ன காரணத்தால் அவரை தாம் அடித்ததாக அவரது கணவர் கூறியுள்ளார் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் தாய் தனது பிள்ளையின் பாதுகாப்பு கருதியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காகவும் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்க நடவடிக்கை எடுத்ததாகக் கிறிஸ்டோபர் கூறினார்.


