கிள்ளான், ஜூன் 29 - போர்ட் கிள்ளானில் உள்ள கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசலுக்கு அருகில் தகனம் செய்யப்பட்டவர்களின் அஸ்தியை சேமித்து வைப்பதற்காக நான்கு மாடி நினைவகத்தை கட்டும் திட்டத்தை கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) நிராகரித்துள்ளது.
உள்ளூர்வாசிகளின் நுட்ப ரீதியான கவலைகள் மற்றும் ஆட்சேபனைகளை கருத்தில் கொண்டு கடந்த வியாழக்கிழமை (ஜூன் 26) நடைபெற்ற மைய அங்கீகார (ஒஎஸ்சி) குழுக் கூட்டத்தின் போது இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என்று கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன் தெரிவித்தார்.
இருப்பினும், சம்பந்தப்பட்ட மேம்பாட்டாளர் 30 நாட்களுக்குள் மாநில நகர மற்றும் கிராம திட்டமிடல் துறையிடம் மேல்முறையீடு செய்யலாம்.
மேல்முறையீட்டு வாரியத்தின் முடிவில் இன்னும் அதிருப்தி ஏற்பட்டால் அவர்கள் இந்த விஷயத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லலாம் இன்று செந்தோசா தொகுதியில் தூய்மை மற்றும் பசுமை திட்டத்தை தொடங்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பு மேம்பாட்டாளர் விண்ணப்பத்தை பரிசீலிப்பதில் மாநகர் மன்றம் சரியான நடைமுறைகளையும் உரிய செயல்முறையும் மேற்கொண்டதாக அப்துல் ஹமீட் குறிப்பிட்டார்.
கம்போங் ராஜா ஊடா பள்ளிவாசலுக்கு அடுத்து அமைந்துள்ள ஒரு ஹெக்டேர் அளவிலான தனியாருக்குச் சொந்தமான நிலத்தில் இறுதிச் சடங்கு மேலாண்மை வளாகம் கட்டுவதற்கு கம்போங் ராஜா ஊடாவைச் சேர்ந்த குடியிருப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததாக பெர்னாமா கடந்த ஜூன் 6 ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்த நிலம் கிராமப் பகுதிக்குள் உள்ளது. சுமார் 5,000 குடியிருப்பாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் உள்ளவர்களில் பெரும்பாலோர் முன்மொழியப்பட்ட மேம்பாட்டிற்கு உடன்படவில்லை. ஜூன் 4 முதல் மாநகர் மன்றத்திற்கு 300க்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் இணையம் வழி சமர்ப்பிக்கப்பட்டன.


