ஷா ஆலம், ஜூன் 29- அடுத்த மாதம் 7 ஆம் தேதி தொடங்கவுள்ள சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி சுபாங், புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த பெட்ரோனாஸ் எரிவாயு குழாய் வெடிப்பு உட்பட பல முக்கிய பிரச்சினைகள் மீது கவனம் செலுத்தப்படும்.
ஷா ஆலம் விளையாட்டு தொகுதியின் மேம்பாடு, வெள்ள சம்பவங்கள் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய முதலீட்டு முன்னெடுப்புகள் மக்கள் பிரதிநிதிகளால் எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படும் பிற பிரச்சினைகளாகும் என்று சட்டமன்ற சபாநாயகர் லாவ் வெங் சான் கூறினார்.
இக்கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் அம்சங்களில் ஒருங்கிணைந்த சுற்று (ஐ.சி.) வடிவமைப்பு பூங்கா, செமிகண்டக்டர் தொழில் மற்றும் மக்கள் நலன் சார்ந்த அம்சங்களும் அடங்கும். இவை பல மாநில சட்டமன்ற உறுப்பினர்களின் கவனத்தை பெற்றுள்ளன என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
மேலும், எழுப்பப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் துணைக் கேள்விகளைச் சமர்ப்பிப்பது உட்பட விவாதத்தில் தீவிரமாக பங்கேற்குமாறு அனைத்து அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர் நினைவூட்டினார்.
இந்த கூட்டத் தொடர் ஷா ஆலமில் உள்ள அனெக்ஸ் கட்டிடத்தில் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும். முதல் அமர்வு ஜூலை 7 முதல் 11 வரையிலும், இரண்டாவது அமர்வு ஜூலை 14 முதல் 18 வரையிலும் நடைபெறும்.
பொதுமக்கள் இந்த அமர்வின் நேரடி ஒளிபரப்பை selangortv.my வலைத்தளம் மற்றும் Facebook, Instagram, X, TikTok மற்றும் Telegram மற்றும் MYTV சேனல் உள்ளிட்ட மீடியா சிலாங்கூரின் அனைத்து அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்கள் வழியாகவும் காணலாம்.


