MEDIA STATEMENT

கோத்தா கெமுனிங் வெள்ளம்- மத்திய அரசின் உதவி தேவை- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கோரிக்கை

29 ஜூன் 2025, 4:46 PM
கோத்தா கெமுனிங் வெள்ளம்- மத்திய அரசின் உதவி தேவை- சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் கோரிக்கை

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், ஜூன் 29- கோத்தா கெமுனிங் தொகுதி எதிர்நோக்கும் வெள்ளப் பிரச்சினை குறித்து மத்திய அரசு எந்த அக்கறையும் காட்டாத தோடு நிதி ஒதுக்கீடும் செய்யாதது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன் வேதனை தெரிவித்தார்.

 ஜாலான் புக்கிட் கெமுனிங் சாலையில் உள்ள கால்வாய்களை தரம் உயர்த்தி முறையாகப் பராமரிப்பதற்கு ஏதுவாக நிதி ஒதுக்கீடு செய்யும்படி கோரி பொதுப்பணித் துறை அமைச்சருக்கு (டத்தோ அலெக்சாண்டர் நந்தா லிங்கி) தாம் கடிதம் எழுதியுள்ள போதிலும் அது குறித்து இதுவரை எந்த மறுமொழியும் கிடைக்கவில்லை என்று அவர் சொன்னார்.

புக்கிட் கெமுனிங் சாலையின் பராமரிப்பு தொடர்பில் சிலாங்கூர் மாநில பொதுப்பணி இலாகா இயக்குநர் கூட என்னைத் தொடர்பு கொள்ளவோ கவனம் செலுத்தவோ இல்லை என்று இன்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற மைஐடின்டிட்டி எனும் அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

புக்கிட் கெமுனிங் சாலை போர் நிகழ்ந்த பகுதி போல் உள்ளது. சாலை படுமோசமாக காணப்படுகிறது. இந்த விவகாரத்தை நான் பல முறை அதிகாரிகளிடம் எழுப்பி விட்டேன். எனினும், அத்தனை கோரிக்கைகளும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே உள்ளது என்றார் அவர்.

புக்கிட் கெமுனிங் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதை அறிந்த போதிலும் அச்சாலை மீது யாரும் அறவே அக்கறை காட்டவில்லை. வெள்ளப் பிரச்சினையை களைவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை. கேட்டால் நிதி இல்லை என்று கூறி விடுகிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார்.

பருவநிலை மாற்றம் காரணமாக நிச்சயமற்ற வானிலை நிலவுகிறது. ஆகவே மக்கள் இன்னலுக்குள்ளாவதைத் தடுக்க நாம்  விரைந்து செயல்ட வேண்டும். மக்கள் பேரிடர்களுக்கு பலியாகாமல் பாதுகாப்பாக வாழ்வதை உறுதி செய்வது ஒவ்வொரு அரசாங்கத்தின் கடமையாகும் என அவர் வலியுறுத்தினார்.

 கோத்தா கெமுனிங் தொகுதியில் வெள்ளப் பிரச்சினை என்பது புதிதல்ல. எனினும் நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட வேண்டும் என நான் விரும்புகிறேன். ஷா ஆலம் மாநகர் மன்றம், வடிகால் மற்றும் நீர்ப்பாசன துறை (ஜே.பி.எஸ்). பொதுப்பணி இலாகா மற்றும் சம்பந்தப்பட்ட இதரத் துறைகளின ஒத்துழைப்பு இதில் அவசியம் தேவைப்படுகிறது.

இந்த வெள்ளப் பிரச்சினையை நான் ஒவ்வொரு சட்டமன்றக் கூட்டத் தொடரின் போதும் எழுப்பி வந்துள்ளேன். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பதையும் நான் ஒப்புக் கொள்கிறேன். எனினும் பொது மக்களின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துவதால் இந்த வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் மேலும் துரிதப்படுத்தப்பட வேண்டும் என்றார் அவர்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.