(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 29- கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில் இன்று இங்குள்ள எம்.பி.எஸ்.ஏ. ஏஸ்டர் மண்டபத்தில் நடைபெற்ற அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வு மிகவும் பயன்மிக்கதாக விளங்கியது என்று நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் கூறினர்.
அரசாங்க அலுவலகங்களுக்கு நேரில் சென்று தங்கள் அடையாள ஆவணப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு தங்கள் பகுதியிலே நடத்தப்படும் இத்தகைய நிகழ்வுகள் வரப்பிரசாதமாக விளங்குவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
எஸ்.கலையரசி
தனது சிவப்பு அடையாளக் கார்டை மாற்றுவதற்கு பல முறை முயற்சி மேற்கொண்டும் பலனளிக்காத நிலையில் மீண்டும் ஒரு முறை தனது அதிர்ஷ்டத்தை சோதிக்கும் நோக்கில் இந்நிகழ்வுக்கு தாம் வந்ததாக ஷா ஆலம், கோத்தா கெமுனிங்கைச் சேர்ந்த திருமதி எஸ். கலையரசி (வயது 62) தெரிவித்தார்.
தாம் பிறந்த போது பெற்றோர் பிறப்புப் பத்திரம் எடுக்கத் தவறியதால் சிவப்பு அடையாளக் கார்டு வழங்கப்பட்டு விட்டதாகக் கூறிய அவர், நீல அடையாளக் கார்டைப் பெறுவதற்கு தாம் புத்ராஜெயா உள்பட அனைத்து இடங்களுக்கும் சென்று இடைவிடாது முயற்சி மேற்கொண்டு வருவதாக சொன்னார்.
கணவர் இறந்து விட்ட நிலையில் பிள்ளைகளும் இல்லாததால் சிவப்பு அடையாக க் கார்டை வைத்துக் கொண்ட தொழிற்சாலையில் குத்தகை அடிப்படையில் வேலை செய்து வருகிறேன். எனக்கு அரசாங்கத்தின் எந்த சலுகைகளும் கிடைக்கவில்லை. என் கணவர் வாங்கி வீட்டையும் என் பெயருக்கு மாற்ற இயலவில்லை.
இந்நிலையில் நீல அடையாள அட்டையைப் பெறுவதற்கு இயன்ற அனைத்தையும் செய்து வருகிறேன். இந்த நிகழ்விலாவது ஒரு விடியல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன் என்ற அவர் எதிர்பார்ப்புடன் கூறினார்.
ரம்யா தாமரைச் செல்வன்
தன் இரு பிள்ளைகளின் பிறப்பு பத்திரத்தில் விடுபட்டுப் போன தந்தையின் பெயரைச் சேர்ப்பது குறித்து விளக்கம் பெறுவதற்காக தாம் இங்கு வந்ததாக தாமான் ஸ்ரீமூடாவைச் சேர்ந்த ரம்யா தாமரைச் செல்வன் வயது 35) கூறினார்.
தாங்கள் திருமணத்தைப் பதிவு செய்யாததால் பிறப்பு பத்திரத்தில் தந்தையின் பெயர் இடம் பெறவில்லை எனக் கூறிய அவர், கணவரின் மறைவு நிலைமையை மேலும் சிக்கலாக்கி விட்டது என்றார்.
மூன்று பிள்ளைகளில் மூத்தவரின் பிறப்பு பத்திரத்தில் தந்தையின் பெயர் உள்ளது. ஆனால் மற்ற இரு பிள்ளைகளின் பத்திரத்தில் பெயர் இல்லை. தேசிய பதிவுத் துறையில் செய்த விண்ணப்பமும் பதிவுத் திருமணம் இல்லை என்ற காரணத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
ஆகவேதான் இந்த நிகழ்ச்சியின் வாயிலாக ஏதாவது உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தாம் இங்கு வந்தோம் என அவர் சொன்னார். இந்த நிகழ்வு குறித்து டிக்டாக் வாயிலாக தாம் அறிந்து கொண்டதாக கூறிய அவர், இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்த தொகுதி பொறுப்பாளர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.
எஸ். முகுந்தன்
மிகவும் பழுதடைந்த நிலையில் இருக்கும் தன் சகோதரியின் அடையாளக் கார்டை
மாற்றும் நோக்கில் தாம் இந்த நிகழ்வுக்கு வந்ததாக இங்குள்ள புக்கிட் கெமுனிங் 8வது மைலைச் சேர்ந்த எஸ்.முகுந்தன் (வயது 52) கூறினார்.
இந்த அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வு தொடர்பான தகவலைத் தாம் தொகுதியின் புலனகுழுவின் வாயிலாக அறிந்து கொண்டதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்வு மிகவும் பயன்மிக்கதாக விளங்குவதாகக் கூறிய அவர், அடையாள கார்டை மாற்றுவதற்கு தேசிய பதிவுத் துறைக்கு நேரில் செல்வது மிகவும் சிரமமான காரியம் என்பதால் இந்த வாய்ப்பினை தாங்கள் பயன்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.


