கோத்தா திங்கி, ஜூன் 29- ஜாலான் டேசாரு-கோத்தா திங்கி, பெல்டா பாசாக் அருகே நேற்று மாலை நிகழ்ந்த ஐந்து வாகனங்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் இரண்டு முதியவர்கள் பலியானதோடு ஏழு மாத குழந்தை உட்பட ஒன்பது பேர் லேசாக காயமடைந்தனர்.
இந்த விபத்து தொடர்பில் மாலை 4.17 மணிக்கு அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து ஆறு உறுப்பினர்கள் எப்.ஆர்.டி. வாகனத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் தெரிவித்தது.
சம்பவ இடத்தில் ஒரு டோயோட்டா கொரோலா, ஒரு பெரோடுவா ஆக்சியா, ஒரு ஹினோ லோரி, ஒரு புரோட்டான் சாகா மற்றும் ஒரு பெரோடுவா பெஸ்ஸா ஆகிய ஐந்து வாகனங்கள் விபத்தில் சம்பந்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இந்த விபத்தில் 11 பேர் பாதிக்கப்பட்டனர். தோயோத்தா கொரோலா காரில் பயணம் செய்த 69 மற்றும் 74 வயதுடைய இரண்டு முதியவர்கள் வாகனத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை மலேசிய சுகாதார அமைச்சு உறுதிப்படுத்தியது என்று அது ஒரு அறிக்கையில் தெரிவித்தது.
ஏழு மாதக் குழந்தை உள்பட 52 வயது வரையிலான மற்ற ஒன்பது பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. மேலும் தீயணைப்புப் படையினர் வருவதற்குள் அவர்கள் தாங்களாகவே வாகனத்திலிருந்து வெளியேறினர்.
வாகனத்தில் சிக்கியிருந்த இரண்டு முதியவர்களின் உடல்கள் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்தி மீட்கப்பட்டன. பின்னர் அவர்களின் உடல்கள் சுகாதார அமைச்சகம் மற்றும் காவல்துறையிடம் மேல் நடவடிக்கைகளுக்காக ஒப்படைக்கப்பட்டன.


