(ஆர்.ராஜா)
ஷா ஆலம், ஜூன் 29- கோத்தா கெமுனிங் தொகுதி ஏற்பாட்டில் இங்கு இன்று நடைபெற்ற அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலனடைந்தனர்.
இந்த நிகழ்வை அதிகாரப்பூர்மாகத் தொடக்கி வைத்த கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் சம்புநாதன், தேசிய பதிவுத் துறையின் ஆதரவுடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்கு பொதுமக்களிடமிருந்து சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளதாகக் கூறினார்.
கோத்தா கெமுனிங் தொகுதியில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் குடியுரிமை, சிவப்பு அடையாளக் கார்டு, குழந்தைத் தத்தெடுப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டது.![]()
இந்த நிகழ்வில் தேசிய பதிவுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு அடையாள ஆவண விண்ணப்பங்கள் தொடர்பான விதிமுறைகள் மற்றும் தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல்களை பொது மக்களுக்கு வழங்கினர், மேலும், பழுடைந்த அல்லது சேதமடைந்த அடையாளக் கார்டு, பிறப்பு பத்திரம் போன்ற ஆவணங்களை இங்கேயே மாற்றிக் கொள்வதற்கு ஏதுவாக நடமாடும் முகப்பிடச் சேவையையும் வழங்கியது.
இந்த நிகழ்வில் அடையாளக் கார்டு தொடர்பான பிரச்சினைகள் அதிகம் முன்வைக்கப்பட்டதாக கூறிய அவர், தேசிய பதிவுத் துறை அதிகாரிகளிடம் நேரடியாக இது குறித்த விளக்கங்களைப் பெறுவதற்குரிய வாய்ப்பு இங்கு வழங்கப்பட்டது என்றார்.
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மக்களுடன் அரசாங்கம் என்ற கோட்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். சிரமமின்றி சேவைகளைப் பெறுவதில் மக்களுக்கு உள்ள உரிமை நிலைநாட்டப்டுவதை இந்த ‘மைஐடின்டிட்டி‘ எனும் நிகழ்வு நிரூபித்துள்ளது என அவர் சொன்னார்.
எதிர்காலத்திற்கான அடிப்படை ஆதாரமாக விளங்கும் அடையாள ஆவணங்களை ஒவ்வொருவரும் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
இன்றைய நிகழ்வில் அவர்கள் அடையாள ஆவணங்களைப் பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் முறை, தேவைப்படும் ஆவணங்கள் மற்றும் குடியுரிமை பெறுவதற்கு தகுதி உள்ளவர்களா என்பது குறித்து விளக்கங்கள் வழங்கப்பட்டது. நமக்கு சட்ட அமைப்பு முறை அல்லது அதனை பின்பற்ற வேண்டும். இத்தகைய நடைமுறைகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. ஆகவே, இது குறித்து இந்நிகழ்வில் விரிவாக விளக்கம் வழங்கப்பட்டது என்றார் அவர்.
தொகுதி மக்களிடமிருந்து கிடைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த அடையாள ஆவண விளக்கமளிப்பு நிகழ்வு முதன் முறையாக நடத்தப்பட்டதாகக் கூறிய அவர், முதியவர்கள் மற்றும் வசதி குறைந்தவர்களின் சிரமங்களை உணர்ந்து அவர்களின் இருப்பிடத்திற்கு அருகிலே இந்த நிகழ்வினை நடத்த தாங்கள் முன்வந்ததாகச் சொன்னார்.
சமூக நல மேம்பாட்டு அமைப்பின் தலைவர் ரகுபதி ராமன் ஒத்துழைப்புடன் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் ஜே.பி.என். தவிர்த்து குடிநுழைவுத் துறை, தேசிய ஊழியர் சேமநிதி வாரியம் உள்ளிட்ட துறைகளும் முகப்பிடங்களை அமைத்திருந்தன.

