ஈப்போ 28 ஜூன்- இன்று அதிகாலை பாகன் பாசிரில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 21 வீடுகளும், ஒரு உணவுக் கடையும், ஒரு கோயிலும் அழிந்தன.
மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் (ஜே. பி. பி. எம்) பேராக்கின் செயல்பாட்டு உதவி இயக்குநர் சப்ரோட்ஸி நோர் அஹ்மத், இந்த சம்பவத்தில் எவருக்கும் உயிர் பாதிப்பு இல்லை என்று கூறினார்.
அதிகாலை 4:52 மணிக்கு தனது குழுவுக்கு அவசர அழைப்பு வந்ததாகவும் சுமார் 12 நிமிடங்களுக்குப் பிறகு முதல் வாகனம் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தான் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து இரண்டு தீயணைப்பு இயந்திரங்கள், பாகான் தியாங் தன்னார்வ தீயணைப்பு படையுடன் அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டன.
"தீயணைப்பு படை வந்த போது, ஏழு வீடுகள் தீயில் எரிந்து கொண்டிருந்தது ". வீடுகள் ஒன்றுக்கொன்று மிக அருகில் இருந்ததால் தீ விரைவாக பரவியது "என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு ஹைட்ரண்டுகளிலிருந்து குறைந்த நீர் அழுத்தம் மற்றும் நேரடி மின் விநியோக கேபிள் களிலிருந்து மின் கசிவு ஏற்படும் ஆபத்து காரணமாக தீயணைப்பு நடவடிக்கை பலத்த சவால்களை எதிர் கொண்டது என்று அவர் கூறினார்.
காலை 7.30 மணிக்குள் தீ முழுமையாக கட்டுப் படுத்தப் பட்டது, உறுப்பினர்களின் விரைவான நடவடிக்கையினால் அருகே உள்ள பகுதியில் சுமார் 129 வீடுகளை காப்பாற்ற முடிந்தது.
"சம்பவத்திற்கு காரணம் மற்றும் இழப்புகளின் அளவு மற்றும் அழிவுகளின் சதவீதத்தை அடையாளம் காண விசாரணைகள் இன்னும் நடந்து வருகின்றன" என்று அவர் கூறினார்.


