ஷா ஆலம், ஜூன் 27 - அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் 2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளின் (சுக்மா) தொடக்க விழாவிற்கான இடமாக பெட்ரோனாஸ் சிப்பாங் அனைத்துலக பந்தயத் தடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிகழ்வின் தொடக்க விழாவை முந்தைய நிகழ்வுகளிலிருந்து வேறுபட்ட சூழலில் நடத்த சுக்மா செயலகம் விரும்புவதாக இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில் முனைவோருக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் முகமட் நஜ்வான் ஹலிமி கூறினார்.
எஸ்.ஐ.எஸ். வித்தியாசமாக இருக்கும். ஷா ஆலம் விளையாட்டு வளாகம் 2027/2028 இல் நிறைவடைய உள்ளதால் இதன் (தொடக்க விழா) பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க நிகழ்வைப் போல் அமையும் என்று அவர் சொன்னார்.
எஸ்.ஐ.சி.யில் திறப்பு விழாவை நடத்துவது பொருளாதார ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் முன்னேறிய மாநிலமாக மட்டுமல்லாமல் உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு நிகழ்வு இடமாகவும் சிலாங்கூரின் தோற்றத்தை எடுத்துக் காட்டும் என்று அவர் கூறினார் .
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் சுமார் 45 விழுக்காடு பூர்த்தியடைந்த வேளையில் இதற்காக 20 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளதாக நஜ்வான் தெரிவித்தார்.
சிலாங்கூரில் தற்போதுள்ள வசதிகளை பழுதுபார்த்து மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம் என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் அவர் கூறினார்.
சுக்மா உச்சக் குழு சிலாங்கூரை 2026 சுக்மா விளையாட்டின் உபசரணை மாநிலமாக கடந்த ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி அறிவித்தது
சிலாங்கூர் முன்பு 1998 இல் சுக்மாவை ஏற்று நடத்தி ஒட்டுமொத்த சாம்பியனாக உருவெடுத்தது.


