கோல திராங்கானு, ஜூன் 27- பெசுட், மாரா இளநிலை அறிவியல் கல்லூரி (எம்.ஆர்.எஸ்.எம்.) மாணவர் ஒருவர் பகடிவதை செய்யப்பட்டது தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அதே கல்லூரியைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் மூன்று நாட்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
பதினைந்து முதல் 17 வயதுடைய அனைத்து மாணவர்களையும் இன்று தொடங்கி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தடுத்து வைப்பதற்கான உத்தரவை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் மூத்த உதவிப் பதிவாளர் யுஹானிஸ் முகமட் ரோஸ்லான் பிறப்பித்தார்.
குற்றவியல் சட்டத்தின் பிரிவு 147 இன் கீழ் விசாரணை நடத்தப்படுவதற்காக அந்த ஐந்து மாணவர்களும் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர்.
பெசூட், எம்.ஆர்.எஸ்.எம். கல்லூரியில் பயிலும் இரண்டாம் படிவ மாணவர் ஒருவர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 11.30 மணியளவில் விடுதியில் பல மூத்த மாணவர்களால் பகடிவதைக்கு ஆளானதாக பெசூட் மாவட்ட காவல்துறைத் தலைவர் அசாமுடின் அகமது @ அபு நேற்று ஒரு அறிக்கையில் கூறியிருந்தார்.
அம்மாணவர்கள் தம்மை மண்டியிட்டு உட்கார உத்தரவிடப்பட்டதாகவும் தலையில் ஒரு செருப்பை 40 நிமிடங்கள் வைத்திருக்க உத்தரவிட்டதோடு வயிற்றில் குத்தி, அறைந்ததாக பாதிக்கப்பட்டவர் மாணவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளதாக அவர் சொன்னார்.
இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அந்த மாணவருக்கு வயிறு மற்றும் வலது விலா எலும்பில் வலி ஏற்பட்டது. அதே போல் அவரது முதுகில் காயங்களும் ஏற்பட்டன.


