மாஸ்கோ, ஜூன் 27- ஈரான்- இஸ்ரேல் இடையிலான நெருக்கடி முடிந்து போன ஒரு நிகழ்வாக விரைவில் மாறும் என்று ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடின் தனது எதிர்பார்ப்பை வெளியிட்டார்.
பெலாருஸ், மின்ஸ்கிக்கில் நடைபெற்ற இயுராஸியா பொருளாதார ஆய்வரங்கில் பேசிய அவர், யுராஸியா பொருளாதார ஒன்றியத்தின் வர்த்தக உடன்பாட்டில் கையெழுத்திட்ட நாடுகளில் ஒன்றாக ஈரான் விளங்குகிறது என்றார்.
இறைவன் அருளால் மத்திய கிழக்கில் நிலைமை தற்போது தணிந்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் இடையிலான நெருக்கடியை கடந்த போன ஒரு சம்பவமாக இனி நாம் கருதலாம் என அவர் சொன்னார்.
ஈரான் உள்பட அனைத்து வட்டார நாடுகளுடனும் நாம் இனி உறவை வலுப்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் பொருளாகும். நான் குறிப்பிட்டது போல் அவர்களுடன் உடன்பாட்டில் கையெழுத்திட்டுள்ளோம் என்றார் அவர்.
கடந்த ஜூன் 22ஆம் தேதி ஃபார்டோவ் அணுவாயுத தளத்தின் மீது அமெரிக்கா ஆறு பங்கர் பஸ்டர் குண்டுகளை வீசியது. மேலும் நதான்ஸ் மற்றும் இஸ்பஹான் ஆகிய பகுதிகள் மீது நீர்மூழ்கிக் கப்பலிருந்து ஏவுகணைகளை வீசித் தாக்கியது.
ஈரானின் இராணுவ, அணுவாயுத மற்றும் பொது மக்களின் வசதிகளை இலக்காக கொண்டு கடந்த 13ஆம் தேதி தொடங்கி 12 நாட்கள் இஸ்ரேல் தொடர்ச்சியாக நடத்திய தாக்குதலின் ஒரு பகுதியாக அமெரிக்க இந்த குண்டுவீச்சுத் தாக்குலை நடத்தியது.


