சிப்பாங், ஜூன் 27- சைபர்ஜெயாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவியின் கொலையில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு ஆடவரும் இரண்டு பெண்களும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்த 48 மணி நேரத்திற்குள் ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலானில் 19 முதல் 20 வயதுடைய அந்த மூவரும் கைது செய்யப்பட்டதாக சிப்பாங் மாவட்ட காவல்துறைத் தலைவர் நோர்ஹிசாம் பஹாமன் கூறினார்.
அவர்கள் மூவரும் கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கு தெரிந்தவர்கள் என நம்பப்படுகிறது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்வதற்கு ஏதுவாக அம்மூவருக்கும் எதிராக சிப்பாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தடுப்புக்காவல் அனுமதி கோரி போலீசார் விண்ணப்பித்துள்ளனர்.
விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய தவறான தகவல்களைப் பகிர வேண்டாம் என்று நோர்ஹிசாம் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.


