புத்ராஜெயா, ஜூன் 27- பொருளாதார அமைச்சரின் பணிகள் மற்றும் பொறுப்புகளை இரண்டாவது நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் ஏற்பார் என்று அரசாங்கத் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ சம்சுல் அஸ்ரி அபு பாக்கார் கூறினார்.
இந்த விவகாரம் கடந்த புதன்கிழமை அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஒப்புதல் பெறப்பட்டதாக அமைச்சரவை செயலாளருமான அவர் தெரிவித்தார்.
வரும் ஜூலை மாதம் 31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள 13வது மலேசியத் திட்டத்திற்கான அடிப்படை செயல்வரைவை மறுஆய்வு மற்றும் மறுசீரமைப்பு செய்யக்கூடிய பிரதான பொறுப்பை அமீர் ஹம்சா ஏற்றுக் கொள்வார் என சம்சுல் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
கெஅடிலான் ராக்யாட் கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கான போட்டியில் நுருள் இஸ்ஸா அன்வாரிடம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து தாம் வகித்து வந்த பொருளாதார அமைச்சர் பதவியை டத்தோஸ்ரீ ரபிஸி ரம்லி கடந்த மே 28ஆம் தேதி ராஜினாமா செய்தார்.
கட்சித் தேர்தலில் தோல்வி கண்டதைத் தொடர்ந்து அரசாங்கத்தில் கட்சியின் சீர்திருத்தக் கொள்கைகளை அமல் செய்யும் அதிகாரத்தை தாம் இழந்து விட்டதாக ரபிஸி அறிக்கை ஒன்றில் குற்ப்பிட்டிருந்தார்.
இதனிடையே, தம்மீது நம்பிக்கை வைத்து பொருளாதார அமைச்சரின் பொறுப்புகளை கவனிப்பதற்கு வாய்ப்பு வழங்கிய பிரதமருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக அமீர் ஹம்சா கூறினார்.
13வது மலேசியத் திட்டத்தை இறுதி செய்வது எனது தற்போதைய தலையாய கடமையாகும். மடாணி அரசாங்கத்தின் கொள்கைகளை பிரதிபலிப்பதற்கு ஏதுவாக அந்த ஐந்தாண்டு திட்டத்தின் மறுஆய்வு தொடர்பில் அமைச்சர்களிடமிருந்து தாம் கருத்துகளைப் பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.


