ஷா ஆலம், ஜூன் 27- இவ்வாண்டின் 25வது நோய்த் தொற்று வாரம் வரையிலான காலக்கட்டத்தில் சுபாங் ஜெயா மாநகர் மன்றம் 1,866 டிங்கி காய்ச்சல் சம்பவங்களைப் பதிவு செய்துள்ளது. கடந்தாண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் இது 64.81 விழுக்காடு குறைவாகும்.
கடந்தாண்டின் முதல் 25 வார காலத்தில் டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை 5,303ஆக இருந்ததைச் சுட்டிக்காட்டிய சுபாங் ஜெயா டத்தோ பண்டார் டத்தோ அமிருள் அஜிசான் அப்துல் ரஹிம், தொடர்ச்சியான முயற்களின் வாயிலாக இந்த நேர்மறையான பலன்கள் கிட்டியுள்ளன என்றார்.
கடந்த நோய்த் தொற்று வாரத்தில் பிஜேஎஸ் 9/1(லகூன் பெர்டனா-கடை வீடுகள்), பிஜேஎஸ் 11/26 (சன் யு ரெசிடண்ட்), தாமான் பூச்சோங் பெர்டானா 4 ( எச்-கே. அடுக்குமாடி குடியிருப்பு) மற்றும் கோத்தா பெர்டானா கேபி 4 (மாவார் ஜெயா) ஆகியவை நோய்ப் பரவல் அதிகம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டன என்று அவர் சொன்னார்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் டிங்கி பரவலைத் தடுப்பதற்காக சோதனை நடவடிக்கைகளோடு மருந்து மற்றும் புகை தெளித்தல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் மாதாந்திரக் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
நோய்ப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களிடையே டிங்கி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக அவர் சொன்னார்.
பத்து நிமிட டிங்கி தடுப்பு நடவடிக்கை, ஏடிஸ் கொசுக்களை ஒழிப்பதற்கு ஏதுவாக கூட்டு துப்புரவு இயக்கத்தை மேற்கொள்வது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும்படி பொது மக்களை அவர் கேட்டுக் கொண்டார்.


