கிள்ளான், ஜூன் 27- வெளிநாட்டு தொழிலாளர்களை உதவியாளர்களாக பணிக்கமர்த்த அனுமதிக்க வேண்டும் என்ற கடை மற்றும் அங்காடி வியாபாரத்தள வாடகைதாரர்களின் முறையீட்டை பரிசீலிக்க கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி.கே.) தயாராக உள்ளது.
கடை உதவியாளர்களாக உள்ளூர்வாசிகளை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற நிலைப்பாட்டில் தனது தரப்பு இன்னும் உறுதியாக உள்ளதாகவும், எனினும் தொடர்ந்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டியதற்கான காரணங்களை ஏற்றுக்கொண்டதாகவும் கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹூசைன் கூறினார்.
மேல் முறையீடு இருந்தால் நாங்கள் நிச்சயமாக அதனை கவனத்தில் கொண்டு மனிதாபிமான அடிப்படையில் பரிசீலிப்போம். ஏனென்றால், அங்காடி வணிக நிலையங்கள் சிறு அளவிலான வணிக நடவடிக்கைகளுக்கு மட்டுமே ஏற்றவையாகும். வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு சம்பளம் செலுத்த முடியும் பட்சத்தில் அவர்கள் தங்கள் வர்த்தகத்தை உணவகங்களுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்றார் அவர் .
இவ்விவகாரத்தில் மனித கூறுகளை நாங்கள் பார்க்கிறோம். அதாவது அவர்கள் வயதானவர்களா? தனியாக வேலை செய்ய முடியாதவர்களா? இதுதான் வருமானத்திற்கான ஒரே ஆதாரமா? என்பன போன்ற விஷயங்களை கவனத்தில் கொள்கிறோம்.
சிறு வணிகர்கள் தங்கள் சொந்தத் தொழிலை நடத்துவதற்கான வாய்ப்பை நாங்கள் வழங்க விரும்புவதால் இது நிகழ்கிறது என்று அவர் மீடியா சிலாங்கூரிடம் கூறினார்.
ஜூன் 1 முதல் அனைத்து விற்பனை கடைகள் மற்றும் அங்காடிகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை உதவியாளர்களாக பணியமர்த்துவதற்கு மாநகர் மற்றம் தடை விதித்தது.
மலேசிய தொழிலாளர்கள் மட்டுமே கடை உதவியாளர்களாகப் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் அவர்கள் மாநகர் மற்றத்தில் பதிவு செய்ய வேண்டும்.


