கிள்ளான், பல்வேறு வெள்ளத் தடுப்புத் திட்டங்களை மேற்கொள்ள கிள்ளான் அரச மாநகர் மன்ற (எம்.பி.டி.கே.) 3 கோடியே 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கீடு செய்துள்ளதாக கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் வெள்ள நீர் சேகரிப்பு குளம், குப்பைத் தடுப்பு மற்றும் வடிகால் மற்றும் கால்வாய்களைத் தரம் உயர்த்துவது உள்ளிட்ட 18 திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்த திட்டங்கள் யாவும் வெள்ளப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டவை. ஒரு கோடி வெள்ளி செலவில் ஜாலான் டத்தோ டாகாங் மற்றும் ஜாலான் கோத்தா ராஜாவில் மேற்கொள்ளப்படும் வெள்ளத் தடுப்புத் திட்டம் மற்றும் தலா 300,000 வெள்ளி செலவில் ஜாலான் செந்தோசாவில் மேற்கொள்ளப்படும் நீர்ப்பிடிப்பு குளம் மற்றும் கால்வாய் மறுசீரமைப்பு ஆகியவையும் அடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
அனைத்துத் திட்டங்களும் தற்போது அமலாக்கக் கட்டத்தில் உள்ளன. அவற்றில் சில பூர்த்தியடைய 12 மாதங்கள் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சில திட்டங்கள் முற்றுப் பெற அதிக காலம் தேவைப்படும். ஒரு வார காலத்தில் முடியக்கூடிய சாலை புனரமைப்புத் திட்டம் அல்ல இது என அவர் சொன்னார்.
குத்தகையாளர்கள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை நிறைவேற்றி வருகின்றன. இருப்பினும். நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர்க் குழாய்கள், மின்சார கேபிள்கள் மற்றும் கழிவு நீர்க் குழாய்கள் நமது கவனத்திற்கு அப்பாற்பட்டவையாக உள்ளன என்றார் அவர்.
உள்கட்டமைப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹஷிம் தலைமையில் அனைத்து அரசு துறைகளையும் நிறுவனங்களையும் உள்ளடக்கிய செயல் குழு உருவாக்கப்படும் பட்சத்தில் இத்தகைய பிரச்சினைகளுக்கு விரைவாக தீர்வு காண முடியும் என அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.


