கோலாலம்பூர், ஜூன் 27- தனது வீட்டுத் தோழருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டின் விளைவாக உண்டான வாக்குவாதத்தில் ஆடவர் ஒருவர் நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் சுங்கை பூலோ, சுங்கை பெலோங், கம்போங் குபு காஜாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு நிகழ்ந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக இரவு 11.26 மணிக்கு தங்களுக்கு அழைப்பு வந்ததாக சுங்கை பூலோ மாவட்ட காவல்துறைத் தலைவர் முகமது ஹபீஸ் முகமது நோர் கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 33 வயதுடைய ஆடவர் மார்பின் இடது பக்கத்தில் கத்திக் குத்துக் காயத்துடன் கிடப்பதைக் கண்டதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை
சுங்கை பூலோ மருத்துவமனையின் மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காக 40 வயதுடைய வீட்டுத் தோழர் நேற்று முதல் ஆறு நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டுள்ளார் என அவர் சொன்னார்.
இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பாதிக்கப்பட்டவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக சுங்கை பூலோ மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது சுங்கை பெலாங் காவல் நிலையத்தை 03-60383322 என்ற எண்ணில் அல்லது இன்ஸ்பெக்டர் நூர்னாசிஹா நோர்சிலானை 011-11499008 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும் ஹபீஸ் கேட்டுக் கொண்டார்.


