ஷா ஆலம், ஜூன் 26 - காய்ராட் டாருள் ஏஹ்சான் எனப்படும் மரண சகாய நிதி திட்டத்தில் பங்குபெற 50 வயதுக்கு மேற்பட்ட மலேசிய குடிமக்கள் குறிப்பாக பந்திங் மற்றும் கோல லங்காட் தொகுதி வாக்காளர்களுக்கு வாய்ப்பு வழங்க நான்கு இடங்களில் அத்திட்டத்திற்கான பதிவு சாவடிகளை பந்திங் தொகுதி மக்கள் சேவை மையம் ஏற்பாடு செய்துள்ளது.
50 வயதுக்கு மேற்பட்ட அத்தொகுதிகளின் வாக்காளர்கள் இதனுடன் இணைக்கப்பட்டுள்ள சுவரொட்டியில் அளிக்கப்பட்டுள்ள தேதிகள் மற்றும் இடங்களுக்கு சென்று இத்திட்டத்தில் பதிந்து கொள்ளும்படி மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பாராய்டு அழைக்கின்றார்.
மாநில அரசின் அந்த 1,000 வெள்ளி உதவித் தொகை அங்கீகரிக்கப்பட்ட வாரிசுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் , பதிவு செய்ய தங்கள் அடையாள அட்டையுடன் வாரிசுகளின் அடையாள அட்டை நகலையும் எடுத்து வரும்படி ஆலோசனை கூறப்படுகிறது.
இந்த மரண சகாய நிதியை அமல்படுத்துவதற்கு மாநில அரசின் 2025ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 2 கோடி வெள்ளி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தின் வாயிலாக 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட 50,000 பேர் பயன் பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில அரசு மரண சகாய நிதியை எஸ்.எம்.யு.இ. எனப்படும் மூத்த குடிமக்கள் நட்புறவுத் திட்டத்தின் கீழ் தொடங்கியது. கடந்த 2019 ஆம் ஆண்டு அத்திட்டம் நிறுத்தப்பட்டு 2021ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்டது.


