புத்ராஜெயா, ஜூன் 26 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று கோத்தா மடாணி மேம்பாட்டுத் திட்டத்தை இங்குள்ள பிரிசிண்ட 19 இல் தொடக்கி வைத்தார். மக்களை மையமாகக் கொண்ட மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு நிலையானதாக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய விவேக நகராக இந்த கோத்தா மடாணி மேம்பாட்டுத் திட்டம் விளங்குகிறது.
சுமார் 400 கோடி வெள்ளி மதிப்பிலான இந்த திட்டத்தை புத்ராஜெயா ஹோல்டிங்ஸ் சென்.பெர்ஹாட் நிறுவனம், ஆரம்ப கட்டத்தில் அரசாங்க நிதி முதலீடு இல்லாமல் பொது-தனியார் ஒத்துழைப்பு மூலம் நிர்மாணிப்பு, குத்தகை, பராமரிப்பு மற்றும் உரிமை மாற்ற கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கும்.
கோத்தா மடாணியில் 30,000 க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் வசிக்கும் வசதி கொண்ட 10,000 உயர் அடர்த்தி குடியிருப்புகள், பள்ளிகள் மற்றும் பல்வேறு பொது வசதிகள் இருக்கும்.
இந்த மேம்பாடு செயற்கை நுண்ணறிவு, ஸ்மார்ட் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் பசுமை இயக்கம் அமைப்புகளை ஒருங்கிணைக்கும்.
திட்டமிடப்பட்ட வசதிகளில் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், தீயணைப்பு மற்றும் காவல் நிலையங்கள், மசூதி மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் கட்டிடக்கலை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் வகையில் உள்ளூர் கலாச்சார கூறுகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன.
முதல் கட்ட கட்டுமானப்பணிகள் வரும் செப்டம்பரில் தொடங்கும். இதன் பணிகள் எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற திட்டமிடப்பட்டுள்ளது.


