ஷா ஆலம், ஜூன் 26 - கோல லங்காட், கஞ்சோங்கில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பந்திங் தொழிற்கல்வி கல்லூரி மாணவர் ஒருவர் கிள்ளான்-பந்திங்-போர்ட் டிக்சன் சாலையின் 32 கிலோமீட்டரில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிழந்தார்.
நேற்று மாலை 5.10 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் தலையில் பலத்த காயங்களுக்குள்ளான அந்த 17 வயது மாணவர் விபத்து நடந்த இடத்திலேயே இறந்துவிட்டதாக கோல லங்காட் மாவட்டக் காவல்துறைத் தலைவர் முகமட் அக்மல்ரிசால் ரட்ஸி தெரிவித்தார்.
தெலுக் டத்தோக்கிலிருந்து பந்திங் நோக்கி யமஹா லஜெண்டா 115Z மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற அம்மாணவர் வலது மற்றும் இடது தடங்களுக்கு இடையில் இருந்த போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து வலது தடத்தில் விழுந்தது ஆரம்ப விசாரணையில் கண்டறியப்பட்டதாக அவர் கூறினார்.
அச்சமயம் வலதுபுற தடத்தில் சென்று கொண்டிருந்த நிசான் லோரி, சாலையில் கிடந்த ஓட்டுநர் மீதும் மோட்டார் சைக்கிளின் மீதும் மோதியது. மோதலின் விளைவாக அந்த மாணவர் மோட்டார் சைக்கிளோடு லோரியின் பின்புற டயரில் சிக்கிக் கொண்டார் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.


