சிப்பாங், ஜூன் 26 - குடியிருப்பாளர்களின் மேம்பாடு மற்றும் சமூக-பொருளாதார மாற்றத்தை முன்னெடுக்கும் ஐந்து திட்டங்களை சிப்பாங் நகராண்மைக் கழகம் அடையாளம் கண்டுள்ளது.
"சிப்பாங், நிலையானது, விவேகமானது' என்ற கருப்பொருளுக்கு ஏற்ப நிலையான சமூகத்தில் சிப்பாங் மாவட்டத்தை ஒரு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த தொழில்நுட்ப நுழைவாயிலாக மாற்றுவதே நகராண்மைக் கழகத்தின் நோக்கமாகும் என்று அதன் துணைத் தலைவர் முகமது ஷா ஒஸ்மின் கூறினார்.
நேற்று நடைபெற்ற நகராண்மைக்கழக கூட்டத்தில் 2035 மேம்பாட்டு வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.
மொத்தம் ஐந்து உந்துசக்தி திட்டங்கள் 'கேம் சேஞ்சர்ஸ்' என அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை மேம்பாட்டு வடிவமைப்பையும் மக்களின் சமூக-பொருளாதார நிலைமையையும் மாற்றும் என்று முகமது ஷா கூறினார்.
இந்தத் திட்டத்தில் சைபர்ஜெயாவை ஒரு பிராந்திய உயர் தொழில்நுட்ப மையமாக மாற்றுவதும் ஒருங்கிணைந்த சரக்கு போக்குவரத்து மற்றும் வான்போக்குவரத்து மையமாக கே.எல். ஐ.ஏ. ஏரோ போலிஸை
உருவாக்குவதும் அடங்கும்.
கூடுதலாக, சுற்றுச்சூழல் மற்றும் கலாச்சார சுற்றுலா தலமாகத் தென் சிப்பாங் பிரபலப்படுத்தப்படும். தரைப் போக்குவரத்து பெருந்திட்டத்தில் மேம்பாடுகள் மற்றும் ஸ்பான் நகரத்தை செயல்படுத்தும் கருத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்த வடிகால் பெருந்திட்டம் வடிவமைக்கப்படும் என்று அவர் சொன்னார்.


