ஈப்போ, ஜூன் 26 - இங்குள்ள தாமான் தாசேக் டாமாயில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு கத்திக்குத்து காயங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட ஆடவரின் மரணம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அவரது மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பகுதிநேர விற்பனையாளராக பணிபுரியும் 31 வயது சந்தேக நபர் நேற்று முன்தினம் இரவு 12.15 மணிக்கு கைது செய்யப்பட்டு ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்டக் காவல்துறை தலைவர் ஏசிபி அபாங் ஜைனல் அபிடின் அபாங் அகமது கூறினார்.
57 வயதான பாதிக்கப்பட்ட நபர் வீட்டின் சமையலறையில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார். அவரது வயிற்றில் கத்திக்குத்து காயங்களும் மார்பில் வெட்டுக்காயங்களும் காணப்பட்டன.
தனது தந்தை கடைசியாகப் பிற்பகல் 2.40 மணிக்கு தொலைபேசி செய்திக்கு தந்தை பதிலளித்ததாகப் பாதிக்கப்பட்டவருடன் வசித்து வரும் சந்தேக நபர் கூறினார்.
இரவு 7.30 மணிக்கு வீடு திரும்பியபோது இரும்புக் கதவு மற்றும் கண்ணாடி கதவு திறந்திருந்ததோடு வரவேற்பறையில் சோபா அலங்கோலமாகக் கிடந்தது என்று அவர் கூறினார்.
இருப்பினும், எந்த விலையுயர்ந்த பொருளும் காணாமல் போகவில்லை. வீட்டின் கண்காணிப்பு (சிசிடிவி) கேமரா செயல்படவில்லை என்பது சோதனையில் கண்டறியப்பட்டது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் 22 சென்டிமீட்டர் கத்தி வீட்டின் சமையலறை குழாயில் சுத்தம் செய்யப்பட்ட நிலையில் போலீசார் கண்டுபிடித்ததாக அபாங் ஜைனல் அபிடின் தெரிவித்தார்.


