பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 - கடந்த 13 ஆண்டுகாலமாகப் புதிய இணைக் கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காகக் காத்திருந்த பெட்டாலிங் ஜெயாவில் உள்ள எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கனவு நனவாகியது.
அப்பள்ளிக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றும்,அனைத்து பள்ளிகளையும் பாதுகாக்கப்பதே மடாணி அரசாங்கத்தின் முதன்மை கொள்கையாகும் என்றும் கல்வி துணையமைச்சர் வோங் கா வோ குறிப்பிட்டார்.
நேற்று இப்பள்ளியின் புதிய கட்டடத்தை வோங் கா வோ திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து பள்ளியைப் பார்வையிட்ட அவர், பழைய கட்டடத்தில் ஏற்பட்டுள்ள விரிசல் பழுது பார்ப்புப் பணிகளுக்காக 70,000 ரிங்கிட் உதவி நிதி வழங்குவதாகவும் உறுதியளித்தார்.
"தேசியப் பள்ளிகளும் தமிழ் மற்றும் சீனப் பள்ளிகளும் நமது அரசாங்கத்தின் கீழ் கல்வியின் ஒரு பகுதியாகும். கல்வி அமைச்சரும் நடப்பு அரசாங்கமும் இந்த உறுதிப்பாட்டை அளித்துள்ளது. நாட்டின் கல்வித் தரத்திற்கு முக்கிய உத்தரவாதத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது, என்றார் அவர்.
தமிழ்ப்பள்ளிகளுக்காக முன்னாள் பிரதமரால் ஒதுக்கப்பட்ட சிறப்பு மானியத்தின் கீழ், கடந்த 2014ஆம் ஆண்டு, எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் புதிய இணைக் கட்டடத்திற்கான கட்டுமானப் பணித் தொடங்கியது.
ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டே 95 விழுக்காட்டு வேலைகள் பூர்த்தியடைந்த நிலையில், நிலப்பிரச்சனை காரணமாக இதர ஐந்து விழுக்காட்டுப் பணிகள் நிலுவையில் இருந்ததாக பள்ளி மேலாளர் வாரியத் தலைவர் தனபாலன் குப்புசாமி தெரிவித்தார்.
"2015 முதல் 2018ஆம் ஆண்டு வரையில் பள்ளியின் நில உரிமை பிரச்சனைகளை நாங்கள் எதிர்நோக்கி இருந்தோம். அதையடுத்து 2020 முதல் 2024ஆம் ஆண்டு வரையில் சிசிசி எனப்படும் மாநகர் மன்ற அனுமதி சான்றிதழிலிலும் குளறுபடிகள் ஏற்பட்டிருந்தது. இந்த அனைத்து பிரச்சனைகளும் மடாணி அரசாங்கத்தின் உதவியால் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன," என்று தனபாலன் குப்புசாமி தெரிவித்தார்.
இப்புதிய கட்டடம் எப்பிங்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தரத்தை மேம்படுத்துவதுடன் ஆசிரியருக்கும் மாணவருக்கும் வசதியான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் தாம் எதிர்ப்பார்ப்பதாக அவர் கூறினார்.
-- பெர்னாமா


