புத்ரஜெயா, ஜூன் 26 - பணமோசடியில் ஈடுபட்டது, ஊழல் மூலம் கிடைத்த வருமானத்தை பாதுகாப்பாக வைக்க தனது தனிப்பட்ட மற்றும் தனக்கு சொந்தமான நிறுவனங்கள், உறவினர்களின் வங்கி கணக்குகளைப் பயன்படுத்தியது தொடர்பில் அரசு சாரா அமைப்பின் (என்.ஜி.ஓ.) தலைவர் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் செய்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து சந்தேக நபரை சனிக்கிழமை வரை நான்கு நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் இர்சா சுலைகா ரோஹனுடின் அனுமதி வழங்கினார்.
முன்னதாக தாம் பணிபுரிந்து வந்த ஒரு அரசு சாரா நிறுவனத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்தது மற்றும் நிதியை தவறாகப் பயன்படுத்தியது தொடர்பாக 2009 ஆம் ஆண்டு எம்.ஏ.சி.சி. சட்டத்தின் 23வது பிரிவின் கீழ் விசாரிப்பதற்காக அந்த நபர் ஜூன் 19 வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.
முப்பது வயது மதிக்கத்தக்க அந்த நபர் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்தபோது கைது செய்யப்பட்டதாக வட்டாரங்கள் கூறின.
சந்தேக நபர் கடந்த 2015 மற்றும் 2025 க்கு இடையில் இந்த குற்றத்தைப் புரிந்ததாக நம்பப்படுகிறது.
இதற்கிடையில், இந்த கைது நடவடிக்கையை எம்.ஏ.சி.சி. பணமோசடி தடுப்பு (ஏ.எம்.எல்.) பிரிவு இயக்குநர் நோர்ஹைசாம் முகமது பெர்னாமாவிடம் உறுதிப்படுத்தினார்.


