கிள்ளான், ஜூன் 26 - மேரு தொழில்பேட்டைப் பகுதியில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் மறுசுழற்சி தொழிற்சாலை ஒன்று எரிந்து நாசமானது.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்று மதியம் 12.14 மணிக்கு தமது துறைக்கு அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் மாநிலத் தீயணைப்பு மற்றும்
மீட்புத் துறையின் நடவடிக்கை பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தார் கூறினார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்த தீயைணைப்பு அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் 6,000 சதுர அடி தொழிற்சாலை தீப்பிடித்து எரிவதைக் கண்டனர்.
விரைந்து செயல்பட்ட அவர்கள் தீ அருகிலுள்ள தொழிற்சாலைக்கு பரவுவதற்கு முன்பு உடனடியாக அணைக்கும் நடவடிக்கைகள் மேற்கொண்டனர் என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த நடவடிக்கையில் காப்பார், வட கிள்ளான், தென் கிள்ளான் மற்றும் புக்கிட் ஜெலுத்தோங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களைச் சேர்ந்த 22 அதிகாரிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேலும் நான்கு தீயணைப்பு மீட்பு டெண்டர் வாகனங்கள் மற்றும் இரண்டு தண்ணீர் டேங்கர்கள் தீயை அணைக்கும் பணிக்கு பயன்பட்டன என்று அவர் கூறினார்.
இச்சம்பவம் நடந்த நேரத்தில் தொழிற்சாலை செயல்பட்டு வந்ததாகவும் அங்கிருந்த 20 தொழிலாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிவிட்டதாகவும் அகமது முக்லிஸ் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் சம்பவத்திற்கான காரணம் மற்றும் சேத அளவு இன்னும் விசாரணையில் உள்ளது என்றும் அவர் கூறினார்.


