கோலாலம்பூர், ஜூன் 25 - மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாயிம் ஜைனுடினுடன் தொடர்புடைய மெனாரா இல்ஹாம் கட்டிடத்தை பறிமுதல் செய்ய மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) விண்ணப்பித்துள்ளது.
துன் டாயிம், அவரது மனைவி தோ புவான் நயிமா அப்துல் காலிட் மற்றும் அவர்களது உள்ளூர் பிரதிநிதிகள் பலருக்கு எதிராக சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட பறிமுதல் நடவடிக்கைகளில் தொடர்புடைய சொத்துக்களில் அந்த 60 மாடி கட்டிடம் ஒன்றாகும் என்று எம்.ஏ.சி.சி தலைமை ஆணையர் டான் ஸ்ரீ அசாம் பாக்கி கூறினார்.
பறிமுதல் செயல்முறையை இன்று தொடங்குவோம். இது ஒரு எளிய பணி அல்ல என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இதில் பல படிகள் உள்ளன. மேலும் (மெனாரா இல்ஹாம் தொடர்பான) ஆவணங்கள் விரிவானவை.
அடுத்த ஒன்று முதல் இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புடைய சொத்துக்களுக்கு மேலும் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்படும் என்று அவர் இன்று எம்.ஏ.சி.சி. தலைமையகத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கூறினார்.
டாயிம் மற்றும் அவருடன் தொடர்புடைய தரப்பினருக்கு சொந்தமான இங்கிலாந்தில் உள்ள சொத்துக்களுக்கு எதிராக எம்.ஏ.சி.சி. மலேசியாவில் ஒரு தடை உத்தரவைப் பெற்றுள்ளது என்றும் அதன் மதிப்பு 700 கோடி வெள்ளி என மதிப்பிடப்பட்டுள்ளது என்றும் அசாம் மேலும் தெரிவித்தார்.
இதன் தொடர்பில் இங்கிலாந்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு மலேசியாவின் கோரிக்கையின் அடிப்படையில் இங்கிலாந்து நீதிமன்றங்களில் தடை உத்தரவு விண்ணப்பத்தை தாக்கல் செய்ய ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
இம்மாதத் தொடக்கத்தில் துணை அரசு வழக்கறிஞரின் அனுமதியைப் பெற்ற பிறகு எம்.ஏ.சி.சி. மீண்டும் மெனாரா இல்ஹாமைக் கைப்பற்றியது.
நைமா மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் லண்டனில் உள்ள மூன்று சொகுசு குடியிருப்புகள் மற்றும் ஒரு வங்கிக் கணக்கு உட்பட ஏழு சொத்துக்களை முடக்குவதற்கான உத்தரவை உயர் நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை (ஜூன் 23) தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.


