(ஆர்.ராஜா)
கிள்ளானா, ஜூன் 25 - செந்தோசா சட்டமன்றத் தொகுதி, கிள்ளான் அரச மாநகர் மன்றம் (எம்.பி.டி கே.), மாநகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் சூ ஷி தொண்டு நிறுவனத்திற்கு இடையிலான ஒத்துழைப்பை உள்ளடக்கிய வெள்ளத் தடுப்பு ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று இங்குள்ள தொகுதி சேவை மையத்தில் நடைபெற்றது.
மழைக் காலத்தின் போது ஏற்படும் வெள்ளப் பேரழிவுகளைச் சமாளிப்பதற்கான ஆயத்தப் பணிகளை வலுப்படுத்துவதையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் இந்த கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
அவசரகால செயல் திட்டங்கள், நிவாரண தளவாட மேலாண்மை, ஆபத்து நிறைந்த பகுதிகளின் வரைபடம் மற்றும் வெள்ள நிவாரண நடவடிக்கைகளில் சமூக தன்னார்வலர்களின் ஈடுபாடு ஆகியவை விவாதிக்கப்பட்ட விஷயங்களில் அடங்கும்.
பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதாபிமான உதவி விநியோகத்தில் விரிவான நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைக் கொண்டுள்ள சூ ஷி தொண்டு அமைப்புடனான விவேக பங்காளித்துவம் இந்த கூட்டத்திற்கு மதிப்பை சேர்த்தது.
அசம்பாவிதம் ஏதேனும் ஏற்பட்டால் சமூகத்தின் ஒவ்வொரு நிலையிலும் தயாராகவும் பாதுப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய செந்தோசா தொகுதி உறுதி பூண்டுள்ளது. சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் சுறுசுறுப்பான, அக்கறையுள்ள மற்றும் ஒன்றுபட்ட சமூகத்தை உருவாக்குவதில் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த சந்திப்புக் கூட்டம் பிரதிபலிக்கிறது.


